shadow

voteதமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரவீண்குமார் “வரும் ஜனவரி 1ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடைபவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இதற்காக அக்டோபர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதும் ஜனவரி 5ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். புதிதாக விண்ணப்பிக்கும் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்படும். கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதிதாக சேர்க்கப்பட்ட 12 லட்சம் வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வந்தது. அந்த பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. இந்த மாத இறுதியில் இவர்களுக்கு வண்ண அட்டைகள் வழங்கப்படும்.

வண்ண அடையாள அட்டை வழங்கும் பணிக்காக சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி என 5 மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க ஏற்கனவே 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்களின் பெயர் இடம் பெற மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். ஒரு வாக்காளருக்கு 2 இடங்களில் பெயர் இருந்தால் அதை கண்டுபிடித்து நீக்குவதற்காக புதிய சாப்ட்வேர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நபருக்கு ஒரு இடத்தில் தான் பெயர் இருக்கும்.

தேர்தல் அதிகாரிகளுக்கு 2வது கட்ட பயிற்சி வகுப்பு அடுத்த வாரம் தொடங்கும். இவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று தங்களுக்கு கீழ் உள்ள மற்ற அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பார்கள்”

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply