shadow

images

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் ராகுபெயர்ச்சி விழா வருகிற 8-ந் தேதி நடக்கிறது.

நாகநாதர் கோவில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராகு பகவான் தனி சன்னதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சுசீல முனிவரின் குழந்தையை ராகு தீண்டியதால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. இந்த சாபம் நிவர்த்தி பெற ராகுபகவான், திருநாகேஸ்வரம் நாகநாதரை மகாசிவராத்திரி அன்று வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக வரலாறு. ராகுபகவான் 1½ ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அப்போது பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ராகுபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

ராகுபெயர்ச்சி விழா

அதன்படி வருகிற (ஜனவரி) 8-ந் தேதி ராகுபெயர்ச்சி விழா நடைபெறுகிறது. அன்று மதியம் 12.36 மணிக்கு ராகுபகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனையொட்டி மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் போன்ற ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது நலம் பயக்கும் என கூறப்படுகிறது. இதைமுன்னிட்டு ராகுபகவானுக்கு 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை முதல் கட்டமாகவும், 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 2-ம் கட்டமாகவும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

யாகசாலை பூஜைகள்

இதைதொடர்ந்து 6-ந் தேதி மாலை 6 மணிக்கு ராகுபகவானுக்கு முதல்கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. 7-ந் தேதி காலை மற்றும் மாலை 2-ம் மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 8-ந் தேதி காலை 10 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று கடங்கள் புறப்பாடாகிறது. முன்னதாக ராகுபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், மகாதீபாராதனையும் நடக்கிறது. அன்று மாலை வெள்ளி ரிஷப வாகனத்தில் ராகுபகவான் புஷ்ப அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை உதவிஆணையர் ஜீவானந்தம், தக்கார் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply