காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி ”வெற்றி அல்லது வீர சாவு” என்ற முழக்கத்துடன் இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பியக்கம் சார்பில், காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வந்த தமிழ் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு அவர்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.

அக்கட்ச்சியின் அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

7 ஆம் நாளாகப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்று தமிழக அரசு சார்பில் வந்த மருத்துவர் குழு தோழர் தியாகுவின் உடல்நிலையைச் சோதித்து, பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமெனக் காவல்துறை சார்பில் கூறப்பட்டது. இதனையடுத்து, தோழர் தியாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், சிறையில் அடைக்கப்பட்டாலும் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என அறிவித்திருக்கிறார்.

மாநில அரசாங்கமோ மத்திய அரசாங்கமோ உண்ணாவிரதப் போராட்டத்தின் கோரிக்கைக்கு எவ்வித பதிலும் தராமல், அதைப் பற்றிய எவ்வித கருத்தும் கூறாமல், எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் கைது செய்திருப்பது உச்சகட்ட அடக்குமுறை. கூடங்குளம் தொடங்கி இன்றைய தோழர் தியாகுவின் கைது வரை ஜனநாயக வழியிலான போராட்டங்களுக்கு எதிராக அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கை போராடுபவர்களின் கோரிக்கைக்கையைக் காதுகொடுத்து கேட்க கூடத் தயாரில்லை என்பதையே காட்டுகிறது. ஜனநாயக விழுமியங்களை மீறி அரசுகளே செயல்படுவது மிக வேதனையானது.

நடைபெற்ற மனித உரிமை மீறல்களைக் கருத்தில் கொண்டு அங்கே நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்றும், மாநாட்டை இலங்கையில் நடந்த முடிவு செய்த அமைப்புகளுக்கு நிதி உதவிகளை நிறுத்தப்போவதாகவும் கனடா நாட்டின் பிரதம மந்திரி ஸ்டீபன் கார்பர் இன்று அறிவித்துள்ள நிலையில் 6 கோடி தமிழ் மக்களைத் தன்னகத்தே கொண்ட இந்திய திருநாடு இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தமிழர்களின் கோரிக்கைக்கு இதுவரை பதிலும் சொல்லாமல் இருப்பது இவ்வரசு எந்த அளவுக்குத் தமிழர்களை மதிக்கிறதென்பதை காட்டுகிறது.

தோழர் தியாகுவின் கோரிக்கை ஒரு தனி மனிதனின் கோரிக்கையோ ஒரு அமைப்பின் கோரிக்கையோ அல்ல அது ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை. ஒரு லட்சத்தி எழுபத்தையாயிரம் தொப்புள்க்கொடி உறவுகளை இழந்து தவிக்கும், அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு நிற்கும் ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கை. நியாயமிக்க இக்கோரிக்கையை மதிக்காது இந்திய காங்கிரஸ் அரசாங்கமும், கட்சிகளும் செயல்பட்டால் அதற்கான எதிர்வினையை எம்மக்கள் தாங்கள் செலுத்தும் வாக்குகள் மூலமாக வரும் தேர்தலில் காட்டுவார்கள் என்பதையும் அதற்கான பரப்புரையில் முழுமூச்சாக நாம் தமிழர் கட்சி செயல் படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *