shadow

Thappath-Thiruvizha-Madurai-2

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் குளத்தில், தாயார்களுடன் எம்பெருமான் நேற்று எழுந்தருளினார். திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், வைகாசி விசாகத்தேர்த்திருவிழா நடந்து வருகிறது. 10ம் நாள் திருவிழாவான தெப்பத்திருவிழா நேற்றிரவு நடந்தது. இரண்டு கோவில்களிலும் தெப்பக்குளம் இல்லாமல் இருந்ததால், இதுநாள் வரை, தட்டில் நீர் நிரப்பி, கொண்டாடப்பட்டது.பெருமாள் கோவில் திருப்பணியின்போது, புதிதாக தெப்பக்குளம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, 300 ஆண்டுக்குபின், தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நேற்றிரவு நடந்தது. இதற்காக, தெப்பக்குளத்தில், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் தயார் செய்யப்பட்டது. 8:20 மணிக்கு, சக்கரவர்த்தி அலங்காரத்தில், பூமி நீளாதேவி தாயார், கனகவல்லி தாயாருடன் பெருமாள் குளத்துக்கு எழுந்தருளினார். பஞ்சவர்ண குடை பிடிக்க, சுவாமிக்கு சாமரம் வீசி, குளத்துக்குள் சுற்றி வந்தார். பின், மீண்டும் சப்பரத்தில் எழுந்தருளி, தேரோடும் வீதிகளில் உலா வந்தார். ஸ்ரீவிசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலிலும், தெப்பத்திருவிழா நடந்தது.

அதிகாரிகள் அலட்சியம்: 300 ஆண்டுகளுக்கு பின் தெப்பத்திருவிழா நடத்தப்படும் நிலையில், அறநிலையத்துறை முறையாக ஏற்பாடு செய்யவில்லை. டிரம்களை பயன்படுத்தி தெப்பம் அமைத்திருந்தாலும், குளத்தை சுற்றி வரும் வகையிலும், எடை தாங்கும் வகையிலும் அமைக்கவில்லை.அதனால்,தெப்பம் சுற்றி வருவதில் சிக்கல் ஏற்பட்டது; பக்தர்கள் குளத்திற்குள் இறங்கி, தாங்கி பிடித்து, இழுத்து வந்தனர். தெப்பம் ஒரு பக்கம் சாய்ந்தும், படிகளில் மோதியும் வந்தது. இனியாவது, விழா நடத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டக்கூடாது என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply