ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று இரவு டில்லியில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் மும்பை, டிரினிடாட் அண்டு டுபாகோ(வெஸ்ட் இண்டீஸ்) அணிகள் மோதின. “டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, “பீல்டிங்’ தேர்வு செய்தார்.

டிரினிடாட் அணி:

டிரினிடாட் அணிக்கு எவின் லீவிஸ் அதிரடி துவக்கம் தந்தார். ஜான்சன் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். இது, இத்தொடரின் 200வது சிக்சராக அமைந்தது. ஹர்பஜன் “சுழலில்’ சிம்மன்ஸ்(0) சிக்கினார். ஜான்சனின் அடுத்த ஓவரில், லீவிஸ் மூன்று பவுண்டரிகள் விளாசினார். தன் பங்கிற்கு 2 பவுண்டரிகள் அடித்த திருப்தியுடன், டேரன் பிராவோ (14) கிளம்பினார். ஹர்பஜன் ஓவரில் 2 சிக்சர் அடித்த லீவிஸ், “டுவென்டி-20′ கிரிக்கெட்டில் 3வது அரைசதம் கடந்தார். இவர், 46 பந்துகளில் 62 ரன்களுக்கு போலார்டு பந்தில் அவுட்டானார்.

இதன் பின் ஆட்லே, ராம்தின் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்த, அணியின் ரன்வேகம் குறைந்தது. ஜான்சன் “வேகத்தில்’ ராம்தின்(9) போல்டானார். பூரன் (15) நிலைக்கவில்லை. டிரினிடாட் அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. ஆட்லே (41), ஸ்டூவர்ட் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

மும்பை அணி:

சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு சச்சின், டுவைன் ஸ்மித் சேர்ந்து அசத்தல் துவக்கம் தந்தனர். டிரினிடாட் பந்துவீச்சை ஒருகை பார்த்த இவர்கள், மின்னல் வேகத்தில் ரன் சேர்த்தனர். ராம்பால் ஓவரில் ஸ்மித் 2 பவுண்டரி அடித்தார். மறுபக்கம் ஆட்லே ஓவரில் சச்சின் வரிசையாக 2 சிக்சர்கள் அடிக்க, ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். சிம்மன்ஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஸ்மித் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த நிலையில், சிம்மன்ஸ் பந்தில் சச்சின்(35) வெளியேறினார்.

இதற்கு பின் வழக்கம் போல் சுனில் நரைன் சுழல் ஜாலம் காட்டினார். தனது முதல் ஓவரில் ராயுடு(0), ஸ்மித்தை(59) அவுட்டாக்கி இரட்டை “அடி’ கொடுத்தார். அடுத்து வந்த ரோகித் சர்மா, ஆட்லே ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து ரன் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். மீண்டும் பந்துவீச வந்த நரைன் வலையில் இம்முறை ரோகித்(25) சிக்கினார். பின் சிம்மன்ஸ் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த தினேஷ் கார்த்திக், அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றார்.. மும்பை அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கார்த்திக்(33), போலார்டு(2) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை ஸ்மித் வென்றார்.

சச்சின் அபாரம்!

“மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 50 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சரித்திர சாதனை படைத்தார். சர்வதேச அளவில் 16வது வீரரானார். நேற்று 35 ரன்கள் எடுத்த இவர், 26வது ரன்னை கடந்த போது இச்சாதனை படைத்தார்.

Leave a Reply