ஐபிஎல் தொடரில் நேற்று மாலை நடந்த முதல் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ், பெர்த் ஸ்கார்செர்ஸ் அணிகள் மோதின. ஏற்கனவே ஒடாகோ அணி 4 போட்டியில் விளையாடி 2ல் வெற்றி பெற்றிருந்தது. மும்பை அணி 3ல் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் நேற்றைய போட்டியில், குறைந்த ஓவரிலேயே அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணி, ஓடாகோவை புறந்தள்ளி அரை இறுதியில் நுழைய முடியும் என்ற நிலை இருந்தது. பெர்த் அணியை பொருத்த வரையில் ஏற்கனவே அது வாய்ப்பை இழந்துவிட்டதால், இப்போட்டி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி டெல்லியில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற மும்பை, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, பெர்த் அணியின் தொடக்க வீரர்களாக அகார், காடிச் ஆகியேழார் களம் இறங்கினர். அகார் 35 ரன்னில் போல்டாக, அடுத்த 3 பந்தில் காடிச்சும் 13 ரன்னில் போல்டானார். கார்ட்வெயிட்டும், வொயிட்மேனும் சேர்ந்து சிறப்பாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 114 ரன் சேர்த்தனர்.

28 ரன் எடுத்திருந்த நிலையில், கார்டிச்சும் போல்டாகி வெளியேற டர்னர் களம் இறங்கினார். ஆனால், அவர் ரன் எதுவும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்த வந்த 2 வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். வொயிட்மேன் மட்டும் அவுட் ஆகாமல் 51 ரன் எடுத்தார். 20 ஓவர் முடிவில் பெர்த் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது.

அடுத்து மும்பை அணி களம் இறங்கியது. 14.2 ஓவரில் 150 ரன் எடுத்தால் மட்டுமே அந்த அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், ஸ்மித், டெண்டுல்கரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டெண்டுல்கர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்த வந்த மேக்ஸ்வெல் 10 ரன்னில் ஆட்டம் இழக்க, ரோகித் சர்மா 3வது விக்கெட்டுக்கு களம் இறங்கினார்.

அவரும், ஸ்மித்தும் சேர்ந்து அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். அரைசதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்மித் 48 ரன்னில் (25 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) ஹாக் பந்தில் பெரென்ட்ரோப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த போலார்டு 23 ரன்னில் ஹாக் பந்தில் போல்டானார். ஆனால், ரோகித் சர்மா 24 பந்திலேயே 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 51 ரன் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். அவருடன் களத்தில் இருந்த ராயுடு 14 ரன் எடுத்தார்.

13.2 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 152 எடுத்து மும்பை அணி வெற்றி பெற்றதால், அந்த அணி எளிதாக அரை இறுதியில் நுழைந்தது. அரையிறுதியில் மும்பை அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

Leave a Reply