shadow

mouli_2528288g

கடந்த ஆண்டு தமிழகத்தையே உலுக்கியது மவுலிவாக்கம் கட்டிட விபத்து. 11 மாடி பிரம்மாண்டக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் உயிரிழந்தார்கள். ஏராளமானோர் காயமடைந்தார்கள். வீடு வாங்குவதற்காகக் கடனை வாங்கி முதலீடு செய்தவர்கள் இதுவரை செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாகத் தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. விபத்துக்கான காரணம், அலட்சியம், பரிந்துரைகளை ஆணையம் தனித்தனியாக அறிக்கையில் குறிப்பிட்டுத் தெளிவுப்படுத்தியுள்ளது. ஆணையத்தின் இந்த அறிக்கை வீடு வாங்குபவர்களுக்கும், வீடுகளைக் கட்டும் பில்டர்களுக்கும் உணர்த்தியிருக்கும் பாடம் என்ன?

அடுக்குமாடிக் கலாச்சாரம்

சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் இன்று அடுக்குமாடிக் கலாச்சாரம் பெருகிவிட்டது. நகரமயமாக்கல் வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், நகரங்களில் அடுக்குமாடி வீடுகள் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருந்தாலும், அடுக்குமாடி வீடுகள் கட்டும் திட்டங்களைக் கட்டுமான நிறுவனங்கள் நிறுத்தவேயில்லை. ஒரு மனை வாங்கி அதில் தனி வீடு கட்டும்போது விதிமுறை மீறல்கள் என்பது சொல்லிக்கொள்ளும்படி இருப்பதில்லை. ஆனால், அதுவே அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்று வரும்போது விதிமுறை மீறல்களுக்குப் பஞ்சமே இருப்பதில்லை.

விபத்துக்கான காரணம்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் (சி.எம்.டி.ஏ.) வாங்கப்பட்ட அனுமதிக்கு மாறாக விதிமுறைகளை மீறிக் கட்டிடம் கட்டப்பட்டதே மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கு முக்கியக் காரணமாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. திட்ட வரைப்படத்தில் 46 தூண்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், கட்டிடம் கட்டப்பட்டபோது 37 தூண்களே கட்டப்பட்டிருக்கின்றன. திட்ட அனுமதிக்கு மாறாக 9 தூண்களைக் கட்டாமல் விட்டிருக்கிறார்கள்.

கட்டிடத்தின் பாதுகாப்புத் திறனின் குளறுபடியையும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சில தொழில்நுட்பக் குறைபாடுகளையும் அது சுட்டி காட்டியுள்ளது. ஒரு தூணுக்கு 420 டன் இருக்க வேண்டிய தாங்கு திறன், 220 டன் என்ற அளவில் இருப்பதை ஆணையம் குறிப்பிட்டுள்ளதைப் படிக்கும்போது அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பாதுகாப்பு பற்றி மிகப்பெரிய கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பில்டருக்குப் பொறுப்பு

மவுலிவாக்கம் கட்டிடம் விபத்துக்குப் பில்டரை முக்கியக் காரணமாக ஆணையத்தின் அறிக்கை குறிப்பிட்டிருப்பதைப் போலவே, தரமான கட்டிடம் கட்டுவதற்குப் பில்டர்களின் பங்கு மிக முக்கியமானது என்கிறார் கட்டுமான அமைப்பான கிரெடாய் தமிழ் நாடு பிரிவு துணைத் தலைவர் கெளதமன்.

“மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கு வரைப்படத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தவறுதான் காரணம். கட்டிடத்தில் பிரச்சினை வராமல் இருக்க வேண்டுமென்றால் அதற்குச் சரியான திட்ட வரைப்படம், அதை அப்படியே செயல்படுத்துவது, தரமான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவது அவசியம். தரமான ஒரு கட்டிடத்தை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க வேண்டியது ஒரு பில்டருக்கு மட்டுமே உள்ள முக்கியக் கடமை. வீடு கட்டி முடித்தவுடன் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (கம்ப்ளீஷன் சர்டிபிகேட்) வாங்கிக் கொடுப்பதும் பில்டரின் பொறுப்பே.

அரசைப் பொறுத்தவரைத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவது, அதை முறையாகச் செயல்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்க மட்டுமே முடியும். தரமான கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை அரசு பார்வையிடுவது நடைமுறையில் கடினமானது. தரமான கட்டிடத்தைக் கட்டுவதில் பில்டர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். பணத்தை மட்டும் பார்க்காமல் தரமான வீட்டை பில்டர் கட்டுகிறாரா என்பதையும், அவரது பின்னணியையும் பொதுமக்கள் பார்க்க வேண்டும். கிரெடாய் அமைப்பும், அதன் உறுப்பினர்களும் தரமான வீடு கட்டுவதில் சமரசம் செய்துகொள்வதில்லை” என்கிறார் கெளதமன்.

வீடுகளைக் கட்டும் கட்டுமான நிறுவனங்கள் இரண்டு வழிகளில் வீடுகளை விற்கிறார்கள். ஒன்று, வீடு கட்டும் திட்டத்தை அறிவித்து, வாடிக்கையாளர்களிடம் முன் பணத்தைப் பெற்றுக் கட்டுமானப் பணிகளைத் தொடங்குகிறார்கள். படிப்படியாக வீடு கட்டும்போது வங்கிகளில் கொஞ்சம் கொஞ்சமாக கடன் தொகையை வாடிக்கையாளர்கள் கொடுப்பது முதல் வழி. இரண்டாவது, கட்டுமான நிறுவனங்கள் தங்களுடைய சொந்தச் செலவில் வீடுகளை முழுவதுமாகக் கட்டி பின்னர் விற்கிறார்கள். வீடு திட்டப்படியும், விதிமுறை மீறாமலும் கட்டப்படுகிறது அல்லது கட்டப்பட்டிருக்கிறது என்பதை இந்த இரண்டு வழிகளில் வீடுகளை வாங்குபவர்கள் எப்படித்தான் தெரிந்து கொள்வது?

வீடுகளைக் கட்டும் கட்டுமான நிறுவனங்கள் இரண்டு வழிகளில் வீடுகளை விற்கிறார்கள். ஒன்று, வீடு கட்டும் திட்டத்தை அறிவித்து, வாடிக்கையாளர்களிடம் முன் பணத்தைப் பெற்றுக் கட்டுமானப் பணிகளைத் தொடங்குகிறார்கள். படிப்படியாக வீடு கட்டும்போது வங்கிகளில் கொஞ்சம் கொஞ்சமாக கடன் தொகையை வாடிக்கையாளர்கள் கொடுப்பது முதல் வழி. இரண்டாவது, கட்டுமான நிறுவனங்கள் தங்களுடைய சொந்தச் செலவில் வீடுகளை முழுவதுமாகக் கட்டி பின்னர் விற்கிறார்கள். வீடு திட்டப்படியும், விதிமுறை மீறாமலும் கட்டப்படுகிறது அல்லது கட்டப்பட்டிருக்கிறது என்பதை இந்த இரண்டு வழிகளில் வீடுகளை வாங்குபவர்கள் எப்படித்தான் தெரிந்து கொள்வது?

அரசுக்குப் பொறுப்பு

“சென்னையைப் பொறுத்தவரையில் வீடு கட்டும் திட்டங்களுக்குச் சி.எம்.டி.ஏ. வழங்கும் அனுமதி, அதற்கான எண், வரைப்படம் முழுவதும் ஆன்லைனிலேயே இருக்கின்றன. இதை வீடு வாங்கும் பொதுமக்கள் சுலபமாக பார்க்க முடியும். ஆனால், அந்த விழிப்புணர்வு இங்கு இல்லை. பெரும்பாலானோர் வங்கிகளில் கடன் வாங்கி வீடு வாங்குகிறார்கள். அந்த வங்கியில் மதிப்பீட்டாளர் ஒருவர் வீட்டை மதிப்பீடு செய்வார். இதை வைத்துக் கடன் கொடுக்கும் வங்கியே இந்த விஷயங்களைப் பார்த்துகொள்ளும் என்று வீடு வாங்குபவர்கள் நினைக்கிறார்கள். மதிப்பீட்டாளர் வீட்டை ஆய்வு செய்வார், திட்டப்படி கட்டப்பட்டிருக்கிறதா என்பதை மட்டுமே பார்ப்பார். வீட்டின் ஸ்திரத்தன்மையை அவரால் சோதிக்க முடியாது.

இதேபோல வீடு கட்டி முடித்த பிறகு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் வீட்டை ஆய்வு செய்து கட்டுமான நிறைவுச் சான்றிதழ் கொடுக்கிறார்கள். இதிலும் வீட்டின் ஸ்திரத்தன்மை, தாங்குத்திறன் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுமா என்பது சந்தேகம்தான். எனவே வீடு விதிமுறைப்படி கட்டப்படுவதையும், வீட்டின் ஸ்திரத்தன்மை பற்றியும் ஆய்வு செய்யத் தனி அமைப்பை அரசு உருவாக்க வேண்டும். வீடு கட்டி கொண்டிருக்கும்போதே, அவ்வப்போது ஆய்வு செய்து, அதை இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறையும் அதைச் செய்ய வேண்டும். அந்த விவரங்களைப் பொதுமக்கள் பார்க்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.

மூன்று மாடிக்கு அனுமதி வாங்கிவிட்டு 4 மாடி கட்டினால், அதைக் கண்டுபிடித்துவிட முடியும். தளத்தில் விதிமுறை மீறல், கட்டப்படும் வீட்டுக்குள் விதிமுறை மீறல்களை ஓரளவுக்கு ஞானம் உள்ளவர்களால் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால். எல்லோராலும் இன்னும் நுணுக்கமாகச் செய்யப்படும் விதிமுறை மீறல்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே அரசு அதைச் செய்ய வேண்டும்.” என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், கட்டுமான விதிமுறைகள் பற்றி நூல் எழுதியவருமான ஷ்யாம் சுந்தர்.

என்னத்தான் அரசுக்கும், பில்டருக்கும் பொறுப்புகள் அதிகம் இருந்தாலும், நம் காலத்துக்குப் பிறகு நம் சந்ததியினரும் வசிக்கக்கூடிய ஒரு வீட்டை தரமாக, எந்த விதிமுறை மீறல் இல்லாமல் வாங்கும் பொறுப்பு, வீட்டை வாங்குபவர்களுக்கும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை

Leave a Reply