ஜெயலலிதா இல்லாததன் வருத்தத்தை உணர்கிறேன். கலாம் மணிமண்டபத்தில் மோடி உருக்கம்

ஜெயலலிதா இல்லாததன் வருத்தத்தை உணர்கிறேன். கலாம் மணிமண்டபத்தில் மோடி உருக்கம்

முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் அவர்களின் மணிமண்டபத்தில் இன்று ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது அவர் ‘வணக்கம் நண்பர்களே’ என்று தமிழில் தனது உரையை தொடங்கினார்.

புனித தலமான ராமேசுவரத்துக்கு வந்ததை என்னுடைய பாக்கியமாகக் கருதுகிறேன். அப்துல் கலாம் என்ற கர்மயோகியைப் பெற்றெடுத்த தலம் ராமேசுவரம். அவர் மூலம் மேலும் புகழ்பெற்ற தலமாக மாறியிருக்கிறது. ராமேசுவரம் மதத்தின் மையமாக மட்டுமல்லாமல், ஆன்மிக பூமியாகவும் இருந்திருக்கிறது. இந்த புனித பூமியைத் தொடுவதில் பெருமைப்படுகிறேன். இங்கு பிறந்த கலாம், அமைதியான, ஆழமான ஆளுமையாக இருந்திருக்கிறார். அவரின் நினைவு தினத்தில் இங்கு வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மறைந்த நாளில் நான் அளித்த வாக்குறுதி இன்று குறுகிய காலத்தில் மணிமண்டபமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

வெங்கய்ய நாயுடுவின் தலைமையிலான குழுவும், தமிழக அரசும் இணைந்து மணிமண்டபத்தை சிறப்பாக அமைத்துள்ளது. இது 125 கோடி மக்களுக்கு மத்திய அரசு மேற்கொள்ளும் திட்டங்களுக்கான முன்மாதிரி ஆகும். நாட்டு மக்கள் என் பின்னால் இருப்பதே, மத்திய அரசு சிறப்பாக செயல்படக் காரணம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இங்கு இல்லாததன் வருத்தத்தை உணர்கிறேன். இருந்திருந்தால் அவர் மணிமண்டபத்தைக் கட்டி முடித்த தொழிலாளர்களின் உழைப்பை வெகுவாகப் பாராட்டி இருப்பார். ராமேசுவரத்தைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு கோரிக்கை. இங்கே வர நீங்கள் திட்டமிடும்போது கலாம் அவர்களின் மணிமண்டபத்தையும் பார்க்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply