shadow

12பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தாக்கலாக இருக்கும் முதல் பட்ஜெட், எப்படி இருக்கும் என்று நாடு முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் ஒவ்வொரு துறையினர்களும் பாஜக அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை தற்போது பார்ப்போம்.

டெக்ஸ்டைல்!

தொழில்துறை உற்பத்தியில் 14%-ஆக இருக்கும் ஜவுளித் துறையின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பதை விளக்கமாக எடுத்துச் சொன்னார், கோவையை மையமாகக் கொண்ட தென் இந்திய பஞ்சாலை சம்மேளனத்தின் (சீமா) தலைவர் டி.ராஜ்குமார்.

”சுமார் 10.5 கோடி மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைத் தருகிறோம். சுமார் 4,200 கோடி டாலர் ஏற்றுமதி மதிப்பைக் கொண்டிருக்கும் தொழில் இது. அதேநேரத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறோம்.

முக்கியமாக, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம் மூலம் அளிக்கப்படும் மானியத் தொகை முறையாகப் பயனாளிகளுக்குச் சேர்வதில்லை. இந்தத் திட்டத்தின் மூலம் மூலதன மானியம் முதல் வட்டிச் சலுகை வரை எங்களுக்குக் கிடைக்க வேண்டும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்தத் திட்டம் முடங்கிவிட்டது.

தவிர, இயந்திரம் வாங்கத் தரும்  முன்தொகைக்கு, மூலதன மானியம் கிடையாது என பல குளறுபடிகள் உள்ளன. திட்டம் அறிவித்தால் அதை முறையாகச் செயல்படுத்த வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலிருந்து பருத்தியை நீக்கியபின் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. நமது 85% பருத்தியை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்கின்றன. வாங்கிய  நான்கைந்து மாதங்களில் விலையை ஏற்றி விற்பனை செய்கின்றன. இதன்காரணமாகத்தான் பஞ்சு விலையில் அதிக ஏற்ற இறக்கம் நிலவுகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பஞ்சு ஏற்றுமதிக்கு வரிச் சலுகை அளிக்கிறது அரசு. ஆனால், இதைப் பெறுவது 5, 6 நிறுவனங்கள்தான். ஆண்டுக்கு 500 கோடி வரிச் சலுகையைக் குறிப்பிட்ட இந்த நிறுவனங்கள் அனுபவிக்கின்றன. விவசாயிகள் நேரடியாக ஏற்றுமதி செய்யவும் முடியாது. இதை மாற்ற வேண்டும்.

தவிர, வங்கிக் கடன் வாங்க முதலீட்டாளர் முன்பணம் (மார்ஜின் மணி) 25%ஆக இருப்பதை 10%ஆகக் குறைக்க வேண்டும். கடனுக்கான வட்டி 14-லிருந்து 7%-ஆகக் குறைக்க வேண்டும்.

செயற்கை இழை (பாலியஸ்டர்) விவகாரத்திலும் குழப்பங்கள் உள்ளது. செயற்கை இழை உற்பத்தியில் 35% -ஐ நாம் பயன்படுத்துகிறோம்.  செயற்கை இழை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய இறக்குமதி வரி 5%, கூடுதல் வரி 4%, சிவிடி 12% என மொத்தம் 21%  வரி கட்ட வேண்டும்.

உள்நாட்டு நிறுவனங்களிலேயே வாங்கலாம் எனில், அவர்கள் இந்த 21% வரியையும் சேர்த்தே விற்கிறார்கள். ஆனால், உள்நாட்டில் விற்கும் விலையைவிட குறைந்த விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதனைத் தடுக்க செயற்கை இழை மீதான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

டெக்ஸ்டைஸ் துறை சார்ந்த இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இதற்கு 12% வரை வரி உள்ளது. இந்த  வரியை நீக்க வேண்டும்.

தவிர, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிமுறையை அமல்படுத்த வேண்டும்” என்று முடித்தார் டி.ராஜ்குமார்.


தகவல் தொழில்நுட்பத் துறை!

ஐ.டி துறையின் எதிர்பார்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துச் சொன்னார் நாஸ்காம் அமைப்பின் சென்னை இயக்குநர் புருஷோத்தமன்.

”ஐ/டி துறையின் வளர்ச்சி என்பது இரு முக்கியப் பிரிவுகளின் வளர்ச்சியை உள்ளடக்கியது. பெரிய ஐ.டி நிறுவனங்கள் மற்றும் ஐ.டி எஸ்எம்இ-கள். இதில் பெரிய நிறுவனங்களுக்கு ஒழுங்கான நெறிமுறைகளும், நிலைத் தன்மையும் மற்றும் தெளிவான செயல்திட்டங்களும் தேவை. அதே சமயம், எஸ்எம்இ-களுக்கு சரியான திறன்மேம்பாட்டு பயிற்சிகளும், புதிய கண்டுபிடிப்புகளும் அரசு உதவிகளும் தேவை.

நீண்ட  காலமாக  நிறைவேற்றப் படாமல் உள்ள மத்திய, மாநில அரசுகளின் தொழில்நுட்பமயமாக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்; அரசுத் திட்டங்களில் எஸ்எம்இ-களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யவேண்டும். மேலும், அரசின் பல துறைகளைத் தொழிநுட்பமயமாக்குதலின் மூலம் ஐ.டி துறையும் பயன்பெறும். இந்தியத் தொழில்நுட்ப தொழில்முனைவோர் திட்டத்தைத் தொடங்கி புதிய தொழில்முனைவோர் மற்றும் எஸ்எம்இ-களுக்குப் பயனளிக்கும் வகையில் வழிசெய்ய வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் வரி தொடர்பான சிக்கல்கள், நெறிமுறைகள் மற்றும் நிதி தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வழிசெய்ய வேண்டும்.

வரிவிதிப்பில் சரியான மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள துறையாக ஐ.டி/பிபிஓ-கள் கருதப்படுவதால், அதனை அதிகரிக்கச் சரியான வர்த்தகச் சூழலை உருவாக்க வேண்டும். சாஃப்ட்வேர் மீதான உரிமம் சார்ந்த விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். குறைந்தபட்ச மாற்று வரியை (MAT) சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலிருந்து நீக்க வேண்டும்.

நாடுகளுக்கு இடையேயான வர்த்தகங்களில் விலை மாற்றம்,  டெஸ்டிங் சேவைகளுக்கு வரி விதிப்பது போன்றவற்றைக் களைவதன் மூலம் நீண்டகால அடிப்படையில் வளர்ச்சிக்கான பாதைகளை அமைக்க லாம். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி சரிசமமான வளர்ச்சியை ஏற்படுத்த அரசு உதவ வேண்டும்” என்கிற கோரிக்கைகளை முன்வைத்தார் புருஷோத்தமன்.


எனர்ஜி!

எரிசக்தித் துறையின் எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கிறது என்பது பற்றி சொன்னார் இண்டியா ரேட்டிங் அண்ட் ரிசர்ச் நிறுவனத்தின் இயக்குநர் வெங்கட்ராமன் ராஜாராமன்.

”எனர்ஜி துறையில் உள்ள நிறுவனங்களின் பெரிய பிரச்னையே மின்சாரம் உற்பத்தி செய்யத் தேவையான நிலக்கரி கிடைப்பதில்லை என்பதே. இதனால், 75-80%ஆக இருந்த மின் உற்பத்தித் திறன் 65%ஆகக் குறைந்துவிட்டது.

 

நிலக்கரியை இறக்குமதி செய்யும்போது, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலையும் அதிகரிக்கும். இந்த விலையை அரசாங்கம்தான் தரவேண்டும். ஆனால், அரசாங்கம் தருவதில்லை. மேலும், தனியார் கம்பெனிகளிடம் சந்தை விலைக்குதான் அரசாங்கம் மின்சாரத்தை வாங்குகிறது. மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் எந்த மாநில அரசும் நீண்டகால ஒப்பந்தம் போடுவதில்லை. அதிகபட்சம் ஒரு வருடத்துக்குதான் ஒப்பந்தமே போடுகிறது. இதனால் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் எதிர்காலத் திட்டங்களை மேற்கொள்ள முடிவதில்லை.  

மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்படுத்தும் நிலக்கரியின் தன்மைக்கு ஏற்ப, அரசு வாங்கும் விலையை மாற்றியமைக்க வேண்டும். இந்த இடைவெளி இப்போது 3-4 சதவிகிதமாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் இது அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

மின் உற்பத்தி நிறுவனங்கள் வாங்கிய வங்கிக் கடனை சரியாகத் திருப்பிச் செலுத்தாதலால் இப்போது வங்கிகளும் கடன் தருவதில்லை. இந்த நிலையில், மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் வெங்கட்ராமன்.


விவசாயத் துறை!

விவசாயத் துறையின் எதிர்பார்ப்புகளைச் சொன்னார் பிஎஸ்ஆர் ஆலோசனை நிறுவனத்தின் பார்ட்னர் (கேபிஎம்ஜி-ன் துணை நிறுவனம்) ஆர்.வெங்கடேசன்.  

”நமது விவசாயத் துறையின் மிகப் பெரிய அச்சுறுத்தல் உணவு விநியோக சங்கிலியில் கவனம் இல்லாமல் இருப்பதாகும். போதிய அளவுக்கு விவசாயப் பொருட்களைச் சேமிப்பதற்கான கிடங்கு வசதி இல்லை. இதனால், அறுவடைக்குப்பின் விவசாயிகள் அதிக இழப்புகளைச் சந்திக்கின்றனர் இதை சரிசெய்ய இதற்குத் தேவையான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் கொண்டுவர வேண்டும்.

 

உணவுப் பாதுகாப்பு மற்றும் விநியோக முறைகளில் மாற்றம் வேண்டும். விவசாயிகள், மொத்த விற்பனையாளர்கள், போக்குவரத்து என நமது உணவு விநியோக சங்கிலி உள்ளது. சந்தைப்படுத்தியதுபோக உபரியாகும் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேமித்து வைக்கும் மையங்கள் நம்மிடம் குறைவாக உள்ளன. எனவே, உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் நுகர்வு மையங்களை இணைக்க வேண்டும். இதன்மூலம் உணவுப் பொருட்களுக்கான விலைவாசிகளைச் சீராக வைத்திருக்க முடியும்

இதற்கான உள்கட்டமைப்பை உருவாக்கும் திட்டங்களில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கலாம். சிறு முதலீட்டாளர்களை இதில் கவனம் செலுத்த அரசு ஊக்குவிக்க வேண்டும்.நவீன விவசாய முறைகள் வளர்ந்து விட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனபான்மை இல்லை. பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான வரியை  ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாதிரி விதிக்கின்றன. இதை மாற்ற வேண்டும்.  விவசாயப் பொருட்களுக்குச் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிடங்குகள், ஆராய்ச்சி போன்ற இதர சேவைகளையும் இதில் கொண்டுவர வேண்டும். விவசாயக் கருவிகளுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கடந்த ஒன்பது மாதங்களில் டிராக்டர்களின் விற்பனை 30% குறைந்துள்ளது.

விவசாய உரங்களுக்கு வாட் வரி யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அல்லது குறைந்த அளவாக 2% மட்டும் நாடு முழுவதும் சீரான அளவில் கொண்டு வரலாம். விவசாய இயந்திரங்களுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட வேண்டும். தவிர, உணவுப் பாதுகாப்பு கொள்கையை மறு ஆய்வு செய்து புதிய திட்டம் அறிவிக்கலாம்” என்று முடித்தார் வெங்கடேசன்.

Thanks to Nanayam vikatan.

Leave a Reply