மீத்தேன் வாயு திட்டம் தொடர்பாக சீமான் உண்ணாவிரதம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமை தாங்கினார். குடவாசல் ஒன்றிய செயலாளர் சபேசன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். வக்கீல்கள் நல்லதுரை, பாரதிசெல்வம், மணிசெந்தில், தென்றல் சந்திரசேகர், பால்ராசு, மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரதத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது, மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகளின் விளை பொருள்கள் நாசமாகிறது. இதற்கு சரியான இழப்பீடுகளை தர முடியாத மத்திய அரசு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பூமிக்கு அடியில் 500 அடி ஆழத்தில் இருந்து மீத்தேன் வாயுவை எடுத்து விளை நிலங்களை பாழ்படுத்தும் வெளிநாட்டினருக்கு துணை போகிறது.
ஆழ்குழாய் துளை மூலம் மீத்தேன் வாயுவை எடுக்கும்போது, வெளிப்படும் வாயுவை சுவாசித்தால் மலட்டுத் தன்மை ஏற்படும். அத்துடன் விவசாயிகளின் எந்த சாகுபடியும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதை கடமை உணர்ச்சியுடன் மத்திய அரசுக்கு தெரிவித்தும், அதை கேட்காமல் பன்னாட்டு முதலாளிகளிடம் இந்தியாவை அடகு வைக்க உள்ளார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்.

இந்த திட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளும் துணை போகின்றன. அவர்களுக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டி தமிழர்களை குறிப்பாக தஞ்சை மண்ணை காப்போம். நாம் தமிழர் என்பதை நமது சந்ததியினருக்கு உணர்த்துவோம் என்று சீமான் கூறினார். உண்ணாவிரதத்தில் பேரழிவிற்கான எதிர்ப்பு இயக்க அமைப்பாளர் லெனின், காவிரி விவசாய சங்க நிர்வாகிகள் தனபால், ஜெயராமன், திருநாவுக்கரசு, வரதராஜன், மணிமொழியான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குடவாசல் நகர செயலாளர் செல்வமணி நன்றி கூறினார்.

Leave a Reply