மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நேற்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்க விஞ்ஞானிகள் ஜேம்ஸ் ரோத்மேன் (யேல் பல்கலைக்கழகம்), ராண்டி ஷீக்மேன் (கலிபோர்னியா பல்கலைக்கழகம்), ஜெர்மன் விஞ்ஞானி தாமஸ் சுடோப் (ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்) ஆகியோர் இந்தாண்டுக்கான மருத்துவம் மற்றும் உடற்கூறுவியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள், மூலக்கூறுகளின் விதிமுறைகளை ஆகியவற்றை கண்டறிந்ததற்காக இவர்களுக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் தனித்தனியாக தங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் உயிர்காக்கும் புரோட்டீன்கள் மற்றும் ஏராளமான மூலக்கூறுகளை உற்பத்தி செய்து சரியான நேரத்தில், சரியான இடத்துக்கு சிறு சிறு பகுதிகளாக கடத்துகிறது. உதாரணத்துக்கு இன்சூலின் உற்பத்தி செய்யப்பட்டு ரத்தத்தில் கலக்கப்படுகிறது. அதேபோல் நியூரோ டிரான்ஸ்மிட்டர் என்ற ரசாயண சிக்னல்கள் ஒரு நரம்பு செல்லில் இருந்து மற்றொன்றுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த போக்குவரத்தில் தடங்கல் ஏற்படும்போதுதான் நரம்பியல் நோய்கள், சர்க்கரை நோய் உட்பட பல நோய்கள் ஏற்படுகின்றன. செல் மூலக்கூறு கடத்தலுக்கு தேவையான ஜீன்களை, ராண்டி ஷீக்மேன் கண்டுபிடித்தார். பாலூட்டிகளின் செல்மூலக்கூறு செயல்பாடுகளை ஜேம்ஸ் ரோத்மேன் கண்டறிந்தார். மூலக்கூறுகளை கடத்தும்படி ரசாயண சிக்னல்கள் எப்படி அறிவுறுத்துகிறது என்பதை தாமஸ் சுடோப் கண்டறிந்தார். இதற்காக இந்த மூவருக்கும் மருத்துவத்துவத்துகான நோபல் பரிசு வழங்கப்பட்டதாக, நோபல் குழுவின் செயலாளர் ஜெனரல் கோரன் கே.ஹான்சன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.