shadow

மார்கழி ஸ்பெஷல்: ஆண்டாள் பாடிய திருப்பாவை

மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாளை வேண்டி விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால் திருமணம் ஆகாத கன்னியருக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
மார்கழி ஸ்பெஷல்: ஆண்டாள் பாடிய திருப்பாவை
திருமாலை தனது கணவனாக மனதில் எண்ணிக்கொண்டு, அவரையே நினைத்து உருகியவர் ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவிலில் குடிகொண்டிருக்கும் பெருமாளுக்காக தொடுத்த மலர் மாலைகளை எல்லாம், தானும் அணிந்து அழகு பார்த்து, சூடிக்கொடுத்த சுடர்கொடியாக மாறியவர்.

உலகை ஆளும் கண்ணனே தனக்கு கணவனாக வரவேண்டும் என்பதற்காக, அவர் மேற்கொண்ட நோன்பே பாவைநோன்பு. இந்த நோன்பை கடைப்பிடிப்பதற்காக அதிகாலையில் துயில் கலைந்து எழுந்த ஆண்டாள், தனது தோழியரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு நீராடச் சென்றாள். தன்னை கோபிகையாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், பெருமாள் அமர்ந்த கோவிலை கண்ணனின் வீடாகவும் எண்ணிக்கொண்டு தினமும் அங்கு சென்று வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டவர்.

கண்ணனை அன்றி, மற்ற மானிடரை கணவனாக ஏற்க மாட்டேன் என்று சபதம் மேற்கொண்ட ஆண்டாள், கிருஷ்ணன் அவதாரத்தின் போது கிருஷ்ணரை அடைய கோபியர்கள் மேற்கொண்ட பாவை நோன்பை, மார்கழி மாதத்தில் தானும் மேற்கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவிலுக்கு சென்று தன் கண்ணாளனை கண்கொண்டு காண நாணி, அவரது கையில் இருந்த சங்கை பார்த்தபடி, ‘மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால்’ என தொடங்கி, வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை என்று முடியும் முப்பது பாடல்களை பாமாலையாக தொடுத்து போட்டார்.

‘திரு’ என்றால் மரியாதைக்குரிய என்னும் பொருள்படும். பாவை என்றால் பெண். மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரிய பெண் தெய்வமான ஆண்டாள் பாடிய பாமாலை என்பதால் அது ‘திருப்பாவை’ என்றும் பாவை நோன்பை குறித்த பாடல் என்பதாலும் திருப்பாவை என்று பெயர் பெற்றது. திருப்பாவையின் முதல் பாடலானது, திருப்பாவையின் தொகுப்பு பாடப்பட்டதற்கான நோக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் சுருக்கமாக அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 2 முதல் 5 வரையான பாடல்கள், திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீமன் நாராயணரை பற்றிய சிறப்பை எடுத்துக் கூறுகிறது.

ஆறு முதல் பதினைந்து வரையான துதிப்பாடல்கள், ஆழ்வார் களுக்கு ஒப்பாக தோழியர்களை கற்பனை செய்து கொண்டு அவர்களை எழுப்பி, நீராடிவிட்டு கோவிலுக்கு செல்வதை சொல்கிறது. இறுதியாக வரும் பதினைந்து பாடல் களும், உன்னையே கணவனாக எண்ணிக் கொண்டுள்ள என்னை ஏற்றுக்கொள்ளும்படி, வெண்ணெய் உண்டவனை நினைத்து உருகி பாடியிருப்பதை பார்த்தால் ஆண்டாளின் மனநிலை அனைவருக்கும் புரியும்.

மார்கழி மாதம் அதிகாலை 4.30 மணிக்குள்ளாக எழுந்து நீராடி, கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்தபடியாகவே திருப்பாவை பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். திருப்பாவை பாடல்களை முழுமையாக அல்லாமல், மார்கழி மாதம் முழுவதற்கும் வருமாறு ஒரு நாளைக்கு ஒரு பாடலாக, அந்த ஒரு பாடலை மூன்று முறை பாடவேண்டும்.

முதல் நாள் என்றால் அன்றைய தினம், ‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்’ எனத் தொடங்கும் பாடலை மட்டும் மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு படித்து வரும்போது மார்கழியில் 29 நாட்களே உண்டு. அதன்படி கடைசி நாளில் மட்டும் இரண்டு பாடல்களையும் சேர்த்து மூன்று முறை பாட வேண்டும். இத்துடன் தினமும் வாரணமாயிரம் பகுதியில் இருந்து, ‘வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத’ உள்ளிட்ட பிடித்தமான பாடல்களையும் துதிப் பாடல்களாக சேர்த்து பாட வேண்டும்.

விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது. மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிடலாம். ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள் செய்வாள். திருமணத்தடைகளும் நீங்கும்.

Leave a Reply