2014ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதாவுக்கும் இடையே காரசார மோதல் நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்கவைப்பதற்கு காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்றுவதற்கு பா.ஜனதாவும் மல்லுக் கட்டி வருகின்றன.

இதனால், இரு கட்சிகளின் மேல்மட்ட மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்களிடையே கடுமையான வார்த்தை பிரயோகங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளராக குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்ட பிறகு, இரு கட்சிகளுக்கிடையே மோதல் அதிகரித்துள்ளது.

நரேந்திர மோடியை குறிவைத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசையும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியையும் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் பங்கேற்ற அரிய நிகழ்ச்சி, குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், நாட்டின் முதலாவது உள்துறை மந்திரியும், குஜராத்தில் பிறந்த சுதந்திர போராட்ட வீரருமான சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது.

சர்தார் வல்லபாய் படேல் நினைவு அறக்கட்டளை சார்பில் அந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் திண்ட்சா படேல், அறக்கட்டளையின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

அருங்காட்சியக திறப்பு விழாவில், பிரதமர் மன்மோகன் சிங்கையும், குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியையும் ஒன்றாக கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று அறக்கட்டளை முடிவு செய்தது. அதன்படி, நரேந்திர மோடியை சமீபத்தில் மத்திய அமைச்சர் திண்ட்சா படேல் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதை மோடியும் ஏற்றுக்கொண்டார்.

அருங்காட்சியக திறப்பு விழா, நேற்று ஆமதாபாத்தில் நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங்கும், நரேந்திர மோடியும் பங்கேற்று ஒரே மேடையில் அமர்ந்தார்கள். அருங்காட்சியகத்தை பிரதமர் திறந்துவைத்தார்.

இந்த மேடையில், பிரதமர் மன்மோகன்சிங், நரேந்திர மோடி இருவரின் பேச்சுகளுமே பரபரப்பாக அமைந்தன. சர்தார் வல்லபாய் படேலை ‘மதசார்பற்றவர்’ என்று கூறியதன் மூலம், நரேந்திர மோடியை பிரதமர் மறைமுகமாக விமர்சித்ததாக கருதப்பட்டது.

Leave a Reply