இந்திய ரிசர்வ் வங்கி கட்டிடத்தை புகைப்படம் எடுத்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

இந்திய ரிசர்வ் வங்கி கட்டிடத்தை புகைப்படம் எடுத்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

இந்திய ரிசர்வ் வங்கியை புகைப்படம் எடுத்தது மட்டுமின்றி அது என்னுடைய அடிப்படை உரிமை என்று வழக்கு தொடுத்த வாலிபர் ஒருவருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் எச்சரிக்கை விடுத்ததுடன் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி கட்டிடத்தை அருள்மொழி செல்வன் என்பவர் புகைப்படம் எடுத்தார். அப்போது வங்கி காவலர்கள் அவரை புகைப்படம் எடுக்கவிடாமல் தடுத்தனர். உடனே அருள்மொழி செல்வன், ரிசர்வ் வங்கி எனது அடிப்படை உரிமையை தடுத்துவிட்டது என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் விசாரித்தனர். சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும், கோர்ட்டின் நேரத்தை வீணடித்ததாகவும் அருள்மொழி செல்வனுக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர். அதோடு அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தனர். அந்த தொகையை சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷனில் டெபாசிட் செய்யவும், அதனை பார் அசோசியேஷன் தனது நூலகத்தை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.