திருவனந்தபுரம்: ‘நிதாகத்‘ சட்டத்தின் மூலம் சவுதி அரேபியாவில் வேலை இழக்கும் மலையாளிகளை தனி விமானத்தில் அழைத்து வர கேரள அரசு முடிவு செய்துள்ளது.சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோவதாக சவுதி அரேபியா அரசு கருதியது. இதையடுத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு ‘நிதாகத்’ என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி அனைத்து நிறுவனங்களிலும் உள்ளூர் மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால், லட்சக்கணக்கான இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேலை இழந்த இந்தியர்கள், நாடு திரும்பி வருகின்றனர். ஏராளமான மலையாளிகளும் கேரளா திரும்பி கொண்டிருக்கின்றனர். கடந்த 2 நாட்களில் 246 பேர் கேரளா திரும்பி உள்ளனர். இந்த பிரச்னை பற்றி திருவனந்தபுரத்தில் முதல்வர் உம்மன்சாண்டி கூறியதாவது:சவுதி அரேபியாவில் ‘நிதாகத்‘ சட்டம் அமலுக்கு வந்த பிறகு 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையாளிகள் திரும்பி வந்துள்ளனர். இவர்களுக்காக பல்வேறு மறுவாழ்வு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவில் இருந்து திரும்புபவர்களை இலவசமாக அழைத்து வர தனி விமானம் அனுப்பப்படும் என்றார் உம்மன்சாண்டி.

Leave a Reply