தேனி மாவட்டத்தில் வாழும் ஒரு பெரியவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி விஜி, கணவர் இரண்டாவது திருமணம் செய்ததால் கோபித்துக்கொண்டு தன் அண்ணன் வீட்டிற்கு சென்று விடுகிறார். அவரது அண்ணன் அவருக்கு ஆதரவு தருகிறார்.

இரண்டாவது மனைவியின் மகன் தான் இந்த படத்தின் நாயகன் கதிர். கதிரின் தங்கையும், ஓவியாவும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். தங்கையின் தோழி ஓவியாவை பார்த்தவுடன் காதல் கொள்கிறார் கதிர். கல்லூரி ஹாஸ்டலில் ரேக்கிங் இருப்பதால் தோழியின் வீட்டிலேயே தங்குகிறார் ஓவியா. இதனால் கதிரின் காதல் மேலும் வலுவடைகிறது.

இந்நிலையில் கதிர் தந்தை திடீரென இறந்துவிடவே, முதல் மனைவி விஜி, தன்னுடைய கணவருக்கு தான் மட்டுமே இறுதிச்சடங்கு செய்ய உரிமையுள்ளவர் என்று கூறி தனது கணவரின் பிணத்தை எடுத்துச்சென்று விடுகிறார். தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாத சோகத்தில் இருக்கும் கதிரை, விஜியின் மூத்த மகன் வந்து அழைத்து சென்று இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த விஜியின் அண்ணன் மகன்கள் விஜியின் மகனுடன் சண்டை போடுகிறார்கள். இந்த சண்டையில் விஜியின் அண்ணன் மகன் கொல்லப்பட பழி கதிர் மீது விழுகிறது. எனவே கதிர் தலைமறைவாகிறான்.

கதிரை கண்டுபிடித்து எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று துடிக்கும் விஜியின் அண்ணனிடம் இருந்து கதிர் தப்பித்தானா? கதிர், ஓவியா காதல் வெற்றியடைந்ததா? என்பதை மிகச் சிறப்பான திரைக்கதையுடன் அறிமுக இயக்குனர் விக்ரம் சுகுமாறன் மிக அழகாக கூறியிருக்கிறார்.

நாயகன் கதிர் புதுமுகம் போலவே தெரியவில்லை. காதல், கோபம் போன்ற உணர்ச்சிகளை முகத்தில் வெகு அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஓவியாவை இன்னும் நன்றாக இயக்குனர் பயன்படுத்தியிருக்கலாம். படத்தில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பே இல்லை.

படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பவர் விஜிதான். ஆரோகாணம் படத்தின் மூலமே சிறந்த நடிகை என்று பெயர் வாங்கிய விஜி, இப்படத்தில் தனது நடிப்பை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பாடல்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனாலும் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. ஒளிப்பதிவு கிராமத்து கதை என்பதால் துல்லியமாக இருக்கிறது. அறிமுக இயக்குனர் விக்ரம் சுகுமாறன் தெளிவான திரைக்கதை மூலம் தேறிவிடுகிறார். ஆனால் படத்தில் தெரிந்த முகம் என்று யாருமே இல்லாத குறை தெரிகிறது.

மதயானைக்கூட்டம் ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.

Leave a Reply