shadow

மாரி. திரைவிமர்சனம்

maariதனுஷ், காஜல் அகர்வால் நடித்த ‘மாரி’ படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் தனுஷ் ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் திருப்தி செய்ததா? என்பதை பார்ப்போம்.

செம்மரங்கள் கடத்தும் சண்முகராஜன் கும்பலில் முக்கிய ஆளாக இருக்கும் மாரியின் கட்டுப்பாட்டில்தான் சென்னையின் ஒரு பகுதியே இருக்கின்றது. மாமூல் வாங்குவது முதல், அந்த ஏரியாவுக்கு புதிதாக யாராவது குடிவந்தால் அனுமதி வாங்குவது வரை அந்த ஏரியாவையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தனுஷுக்கு புறா ரேஸில் கலந்து கொள்வதில் மிகுந்த விருப்பம். இந்த ரேஸில் எதிர்கோஷ்டியில் உள்ள ஒருவர் தனுஷை வீழ்த்த போடும் திட்டங்கள், அதற்கு பலியாகி சிறைக்கு செல்லும் தனுஷ், பின்னர் மீண்டும் திரும்பி வந்து தன்னுடைய ஏரியாவை எப்படி மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறார் என்பதுதான் கதை.

நல்ல வேளை சிம்புவின் வாலு எதிர்பாராத காரணத்தால் வெளிவரவில்லை. ஒருவேளை ‘வாலு’ வெளிவந்திருந்தால் கண்டிப்பாக முதல்முறையாக சிம்புவிடம் தனுஷ் தோல்வி அடைந்திருப்பார். வாலு’ எந்த அளவுக்கு மொக்கையாக இருந்தாலும், கண்டிப்பாக ‘மாரி’ அளவுக்கு மொக்கையாக இருக்க வாய்ப்பில்லை.

தனுஷின் விசிலடிச்சான் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம் போல, ஓவர் பில்டப், நம்ப முடியாத காட்சிகள், பஞ்ச் டயலாக்குகள், அளவுக்கு மீறிய அலட்டல், ரெளடித்தனம் செய்வதை நியாயப்படுத்தும் வசனங்கள், கெட்டவனாக வாழ்வதுதான் சிறந்தது என படம் முழுவதும் மொக்கை. ஒரு காட்சி கூட வித்தியாசமாகவோ, ஆடியன்ஸ்களை அசத்தும்படியாகவோ இல்லை என்பதுதான் பெரிய வருத்தம்.

தனுஷின் முந்தைய படங்களான அனேகன், மரியான், விஐபி ஆகிய படங்களில் நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி தெரிந்தது. ஆனால் இந்த படத்தில் அவர் மீண்டும் சுள்ளான் ரேஞ்சுக்கு பின் தங்கிவிட்டார். ஓவர் அலட்டல் உடம்புக்கு ஆகாது என்பதை அவருக்கு யாராவது புரிய வைத்தால் நல்லது.

படித்த, அழகான, அறிவாளியாக இருந்தாலும் ரெளடியாக இருக்கும் ஹீரோவை காதலிக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவின் கேவலமான பார்முலா. அந்த பார்முலாவை இந்த படத்தில் கடைபிடிக்க உதவுபவர் காஜல் அகர்வால். இதைத்தவிர காஜல் அகர்வால் இந்த படத்தில் வேறு என்ன செய்தார் என்பதை சொல்ல எதுவுமே இல்லை.

இந்த படத்தை கொஞ்சமாவது காப்பாற்றி இருப்பது ரோபோ சங்கர்தான். தனுஷ், காஜல் அகர்வால் உள்பட அனைவரையும் அவர் கலாய்க்கும் விதம் சூப்பர். விரைவில் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என்பது உறுதி

பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் அவர்களின் மகன் விஜய் ஜேசுதாஸ் இந்த படத்தின் போலீஸாம். போலீஸுக்குரிய எந்த தகுதியும் இவரிடம் இல்லை என்பதுதான் உண்மை. முகத்தில் ஒரு மிடுக்குத்தனம், கம்பீரம், பாடி லாங்குவேஜ் என்று எதுவுமே இல்லாமல் உணர்ச்சியே இல்லாமல் வசனம் பேசுகிறார். இவர் இன்னும் நிறைய நடிப்பு பயிற்சி எடுத்துவிட்டு அடுத்த படத்தில் நடிப்பது ஆடியன்ஸ்களுக்கு நல்லது.

இயக்குனர் பாலாஜி மோகன், தனுஷின் ஆரம்பகட்ட படங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பலமுறை பார்த்திருப்பார் போலும். அந்த காட்சிகளையே கொஞ்சம் மாற்றி இந்த படத்தில் வைத்துவிட்டார். திரைக்கதையில் படு சொதப்பல். ஒரு டுவிஸ்ட், திருப்பம் ஆகியவை மருந்துக்கு கூட இல்லை. விஜய் ஜேசுதாஸ் போலீஸ் உடை அணிந்த வில்லன் என்பதை தவிர இந்த படத்தில் வேறு எந்த டுவிஸ்டையும் அவர் வைக்கவில்லை.

இந்த படத்தில் ‘செஞ்சிருவேன்’ என்ற வசனத்தை தனுஷ் சீரியஸாக பேசும்போது தியேட்டரில் உள்ள ஆடியன்ஸ் சிரிக்கின்றனர். ரஜினியின் சீவிடுவேன் சீவி என்ற வசனத்துடன் தயவுசெய்து யாரும் இந்த செஞ்சிருவேன் வசனத்தை ஒப்பிட வேண்டாம். தனுஷ் இன்னும் இரண்டு படங்கள் இதேபோன்று நடித்தால் அவரை ரசிகர்கள் “செஞ்சிடுவாங்க” என்பது தான் உண்மை.

அனிருத்தின் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன என்பது ஒரு ஆறுதல் என்றாலும் பின்னணி இசையில் ஒரே சத்தம். தாங்கமுடியவில்லை. மற்றபடி எடிட்டிங், ஒளிப்பதிவு ஆகியவை ஓகே ரகம்.

மொத்தத்தில் மாரி, வெரி வெரி சாரி…..

Leave a Reply