shadow

நீதியின் வெற்றி கொண்டாடுவதற்கல்ல: கடைப்பிடிக்க. மு.க.ஸ்டாலின் அறிக்கை நியாயமா?

ஊழல் குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்பதை உறுதி செய்யும் வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பு என்றும், இந்த தீர்ப்பு கொண்டாடப்படுவதற்கு அல்ல என்றும், பொதுவாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை நெறிகளுக்கானது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலுமே அரசியல் என்பது மக்களுக்கான சேவை என்பது மாறி, அது ஒரு வியாபாரம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டது. தேர்தலின் போது போட்ட முதலீட்டை பலமடங்கு ஐந்து வருடங்களில் திருப்பி எடுக்கும் வியாபாரியாகத்தான் மக்கள் அரசியல்வாதிகளை பார்த்து வருகின்றனர்.

காமராஜருக்கு பின்னர் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட அரசியல் தலைவர் யாரும் தமிழக மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. இன்று ஜெயலலிதாவும் சசிகலாவும் ஊழல் புரிந்ததற்காக தண்டனை பெற்றுள்ளனர் என்றால் அதற்காக மீதி அரசியல்வாதிகள் புனிதர்கள் அல்ல. இவர்கள் ஊழல் செய்து மாட்டிக்கொண்டனர். மற்றவர்கள் தப்பித்துள்ளனர் என்பது தான் பொருள்

இன்னும் சொல்லப்போனால் ஊழலை தமிழகத்தில் அறிமுகம் செய்ததே செயல் தலைவரின் தந்தை கருணாநிதிதான். விஞ்ஞானபூர்வமான ஊழல்’ என்று நீதிமன்றமே பாராட்டியதை செயல் தலைவர் மறந்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

இன்றைக்கு கவுன்சிலர் இருந்து பெரிய பதவியில் இருக்கும் நபர் உள்பட ஊழல் செய்யாதவர்கள் யாருமே இல்லை என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது. மக்கள் தேர்தலில் ஓட்டு போடும்போது குறைவாக ஊழல் செய்பவர் யார் என்று தேர்வு செய்து தான் ஓட்டு போடுகின்றார்களே தவிர, ஊழலே செய்யாதவர்களுக்கு ஓட்டு போட்டனர் என்பது அர்த்தம் அல்ல

செயல் தலைவர் ஊழல் என்றால் என்ன என்றே தெரியாதவர் போல அறிக்கை விடுத்திருப்பதால் மக்கள் அவருடைய பக்கம் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு வேண்டாம்.

Leave a Reply