shadow

இன்று முதல் வாகன இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு: லாரி உரிமையாளர்கள் அதிரடி முடிவு

இன்று முதல் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 11% முதல் 100%க்கும் மேல் உயர்ந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இன்று முதல் ஒருசில சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது வாகன இன்சூரன்ஸ் கட்டணமும் உயர்ந்துள்ளது வாகன உரிமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.சுகுமார் கூறியதாவது:-

பெட்ரோல்-டீசல், சுங்க கட்டண உயர்வால் லாரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இன்சூரன்சு கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 15 சதவீதமாக இருந்த சேவைவரி நீக்கப்பட்டு, தற்போது 18 சதவீத ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டியுள்ளது.

3-ம் நபர் விபத்து காப்பீடு நிவாரணத்துக்கான நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இன்சூரன்சு கட்டமுடியாமல் ஏராளமான வாகனங்கள் எடைக்கு போடப்பட்டு உள்ளன. தற்போது உயர்த்தப்பட்டு உள்ள இன்சூரன்சு கட்டணத்தால் போக்குவரத்து வாகனங்களின் வாடகை உயரும் என்பதோடு, பொருட்களின் விலையும் கடுமையாக உயரும். விலைவாசி 40 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்.

தனியார் இன்சூரன்சு நிறுவனங்களுக்கு சாதகமாக மேற்கொள்ளப்பட்டு உள்ள இந்த கட்டண உயர்வை கண்டித்து 7-ந்தேதி முதல் சரக்கு லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இது சம்பந்தமாக இறுதி நோட்டீசு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தில் உள்ள 4½ லட்சம் லாரி உரிமையாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இதில் 1½ லட்சம் லாரிகள் நேஷனல் பர்மிட் உரிமம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply