ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா, பாராளுமன்ற மக்களவையில் கடந்த 2011 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. அப்போது டெல்லி மேல் சபையில் நள்ளிரவு வரை விவாதம் நடைபெற்றும் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அதைத் தொடர்ந்து தேர்வு குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. தேர்வு குழு வழங்கிய 22 திருத்தங்களில் மூன்றை தவிர மற்ற திருத்தங்கள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

திருத்தப்பட்ட லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்ட மசோதா (2011), மேல் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.  விவாதத்தில் பங்கேற்ற சமாஜ்வாடி கட்சி தவிர அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே ஒரு சில யோசனைகளை தெரிவித்தாலும் மசோதாவுக்கு ஆதரவு அளித்தன. 5 மணி நேர விவாதத்திற்கு பிறகு பதில் அளித்து மந்திரி கபில் சிபல் பேசியபின் குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக்பால் மசோதா மேல் சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

திருத்தப்பட்ட லோக்பால் மசோதா மீண்டும் இன்று பாராளுமன்ற மக்களவையில் விவாதத்துக்கு வந்து நிறைவேற்றப்படுகிறது. அதன்பிறகு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு லோக்பால் மசோதா சட்டமாக நிறைவேற்றப்படும்.

ஊழலுக்கு எதிரான இந்த லோக்பால் சட்ட மசோதா, சில பாதுகாப்பு அம்சங்களுடன் பிரதமரையும் அதன் விசாரணை அதிகார வரம்புக்குள் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மேல் சபையில் இந்த மசோதா நிறைவேறாமல் போனதற்கு முக்கிய காரணம், மாநில அரசுகள் லோக் அயுக்தாவை உருவாக்குவது கட்டாயம் என்ற பிரிவுக்கு தெரிவிக்கப்பட்ட கடும் எதிர்ப்புதான்.

தற்போது மாநில அரசுகள் லோக் அயுக்தாவை உருவாக்குவது சட்டபூர்வம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுவிட்டது. ஊழல் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியிடம் நோட்டீஸ் அனுப்பாமல் சி.பி.ஐ. அல்லது போலீசார் திடீர் சோதனை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற பா.ஜனதாவின் முக்கிய திருத்தத்தை அரசு ஏற்றுக்கொண்டது.

குறிப்பிட்ட ஒரு வழக்கை விசாரிப்பதற்காக லோக்பால் அமைப்பு நியமிக்கும் சி.பி.ஐ. அதிகாரியை மாறுதல் செய்யக்கூடாது என்ற திருத்தமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி, அவர் மீதான விசாரணை தொடங்குவதற்கு முன்பாக தனது நிலை குறித்து விளக்கம் அளிக்க அனுமதிக்கக்கூடாது என்ற திருத்தம் ஏற்கப்படவில்லை.

ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான 8 உறுப்பினர் லோக்பால் அமைப்பை நியமிப்பதற்கான தேர்வுக்குழுவில் பிரதமர், மக்களவை சபாநாயகர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரபல நீதித்துறை நிபுணர் ஒருவர் இடம்பெறுவார்கள். எனவே லோக்பால் அமைப்பு வெளிப்படை தன்மை கொண்டதாக இருக்கும்.

Leave a Reply