shadow

ஏரிகளும் நமக்கான கோவில்கள்தான்!
lake
ஒரு ஊரில் 100 பனை மரங்களை நட்டுவிட்டு, அந்த ஊரை  விட்டுச் சென்று விடுங்கள். அதே ஊருக்கு 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்து பார்த்தால், அது ஒரு காடாக மாறியிருக்கும். ஒரு பனை மரம் ஒரு காட்டிற்கு சமம். உற்று கவனித்தால் தெரியும். ஒரு பனை இலைக்குள் வண்டு, தேள், பூரான், அரணை, ஓணான், பூச்சிகள்,  தூக்கனாங் குருவிகள்  என அவ்வளவு உயிரினங்களும் உயிர் வாழும். பனைமரங்களின் வேர்கள் ஆழமாக மண்ணுக்குள் சென்று, நிலத்தடி நீரின் அளவினை தக்கவைத்துக் கொள்ளும். நீர் நிரம்பிய இடத்தில், பல்லுயிர்களும் சேர்ந்து வாழும்.

மழை நீரை நிலத்தடிக்கு கொண்டு செல்வதில் பனைமரங்கள் சிறந்தவை. ஏரிகளை காக்கும் காவலன் பனைமரங்கள்தான். ஏரிகளின் முக்கியத்துவத்தை பற்றி பேசுகிறார், தருமபுரி மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம்.

“இன்று நாம் எல்லாரும் நதி நீர் இணைப்பு, காவிரி, முல்லைப் பெரியாறு நீர்ப் பிரச்னை பற்றிப் பேசுகிறோம். தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க அணைகள் கட்ட வேண்டும் என்கிறோம். ஆனால், பாரம்பர்யமான மழை நீர் சேமிப்பு என்பதை மறந்தே விடுகிறோம். ஏரிகளின் மூலம் நாம் நீரை சேமித்துக் கொள்ளலாம். இப்போது, இதை விட்டுவிட்டு நாம் கவர்ச்சியான திட்டங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

பல்வேறு ஏரிகளிலும் இன்று ஆக்கிரமிப்புகள், கட்டடங்கள்  கட்டுவது என்பது மட்டும் பிரச்னையல்ல. குப்பைகளைக் குவிப்பது, ஏரியைத் தூர்வாராமல் வைத்திருப்பது ஆகியவை நீரைத் தேங்க விடாமல் தடங்கல் ஏற்படுத்துகின்றன. இதனால், நீர் வழிப் பாதைகளும் அடைபட்டு விடுகிறது.

தருமபுரியில் இருக்கும் 75 ஏரிகளில், கடந்த ஆண்டு பெய்த மழைக்கு 11 ஏரிகள் மட்டுமே நிரம்பி வழிந்தன. இதற்கு நான் மேற்சொன்ன இடையூறுகளே அதற்கு காரணம். கிருஷ்ணகிரி ஊரில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் ஏரியின் மேல்தான் கட்டப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையாக மதுரையில் இருக்கும் நீதிமன்றமும், சென்னைப் பள்ளிக்கரணையில் இருக்கும் அரசின் ‘கடல்சார் தொழில் நுட்பக் கல்லூரியுமே’ (OCEAN TECHNOLOGY) ஏரியின் மேல்தான் கட்டப்பட்டுள்ளது. புதிதாக ஏதாவது ஒரு பேருந்து நிலையமோ, அரசு அலுவலகமோ கட்ட வேண்டும் என்றால், உடனே ‘ஏரி சும்மாதானே இருக்கிறது, அதன் மீது கட்டலாமே!’ என எந்தவொரு தயக்கமுமின்றி நாமே முன்மொழியும் அளவிற்கு இன்றைய சூழ்நிலை பரிதாபமாகி உள்ளது.
நாம் அனைவரும் குடிக்கும் குடிநீர், ஏரியில் இருந்துதான் வருகிறது என்பதை ஒரு நாளும் மறந்து விடக்கூடாது. தருமபுரி மக்கள் மன்றத்தின் சார்பில் இதுவரை ஒரு ஏரியை தத்தெடுத்து பாதுகாத்து பராமரித்து வருகிறோம். அதற்கு அரசிடம் நாங்கள் போராட வேண்டியிருந்தது. அதன் கொள்ளளவு 3 லட்சம் கன அடியாக இருந்து, கடந்த ஆண்டு பெய்த மழையில் 30 லட்சம் கன அடியாக இன்று வளர்ச்சி கண்டு விரிவடைந்து  நிற்கிறது.

தேவையற்ற மணல், குப்பை ஆகியவற்றை நீக்கி, தூர்வாரி சுற்றிலும் அம்மணலைக் கொண்டு வரப்புகள் (BUNDS) அமைத்துள்ளோம். அதன் நடுவே சின்னச் சின்ன தீவுகளைப் போல மணற்பரப்புகளை உருவாக்கியிருக்கிறோம். நான்கே மாதங்களில் இதை சாதிக்க முடிந்தது. இனி ஒவ்வொரு ஊர்களில் உள்ள மக்களும் ஒன்று கூடி, ஏரிகளை தத்தெடுத்து பராமரித்து வந்தால் நிச்சயம் நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும்.

கோவில்களில் அரசாங்கம் விழா எடுப்பதில்லை, ஊர் மக்கள்தான் அதை செய்கிறோம். அது போலத்தான் ஏரிகளும். ஏரிகளும் நமக்கான கோவில்கள்தான்.

Leave a Reply