தேவையானவை:

காளாபோத்து /சீரக சம்பா அரிசி…..2 ஆழாக்கு/டம்ளர்
தண்ணீர்………………………………………….4 டம்ளர்
பெல்லாரி……………………………………….150 கிராம்
பச்சை மிளகாய்……………………………..6
முந்திரி…………………………………………..20
தேங்காய்.பால் ………………………………1 டம்ளர்
இஞ்சி………………………………………………..1 இன்ச் நீளம்
பூண்டு……………………………………………….10 பல்
எலுமிச்சை ………………………………………1 /2 மூடி
புதினா……………………………………………….கைப்பிடி அளவு
ஏலம்…………………………………………………..3
பட்டை………………………………………………..1 துண்டு
கிராம்பு………………………………………………..4
எண்ணெய்/வெண்ணெய்……………………75 கிராம்
உப்பு…………………………………………………….தேவையான அளவு

செய்முறை:

பெல்லாரியை நீளவாக்கில் வெட்டவும். 3 பச்சைமிளகாயை இரண்டாக கீறிவைக்கவும். இஞ்சி, பூண்டை அரைக்கவும். 3 பச்சைமிளகாய் + 10 முந்திரியை நைசாக அரைக்கவும். தேங்காயைப் பால் எடுக்கவும். பட்டை, கிராம்பை வறுத்து பொடி செய்யவும். அரிசியை கல் நீக்கி, கழுவி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து பாதி எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை நான்கு சிவந்து முறுகும் வரை வதக்கி, எடுத்து வைக்கவும். மீதி 10 முந்திரியையும் வறுத்து எடுக்கவும். குக்கரை வைத்து, அதில் மீதி .எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், ஏலம் உரித்துப் போட்டு, சிவந்ததும் கீறிய பச்சை மிளகாய் போட்டு, கொஞ்ச நேரத்தில், இஞ்சிபூண்டு விழுது போட்டு வதக்கி, பின் அதிலேயே, அரைத்த முந்திரி கலவை + உப்பு போட்டு, 4 டம்ளர் நீர் + 1 டம்ளர் தேங்காய்ப் பால் ஊற்றவும். பின் எலுமிச்சையை சாறு பிழிந்து விடவும்.

நீர் கொதித்ததும், அரிசியைப் போடவும். 10 நிமிடத்திற்குள், அரிசி பாதி வெந்துவிடும்.நீரும் சுண்டி அரிசியுடன் பிரட்டிக்கொண்டிருக்கும்போது, வறுத்து வைத்துள்ள, வெங்காயம், பட்டை கிராம்பு பொடி, புதினா + முந்திரி போட்டு கிளறி மூடி,விசிலையும் போடவும். தீயை சிம்மில் வைக்கவும். விசில் போட்ட 5 நிமிடத்தில் குக்கரை இறக்கி விடவும். விசில் சத்தம் வரும் வரை வைக்க கூடாது. சாதம் அடி பிடிக்கும்.. குழைந்துவிடும்.

இந்த குஸ்காவுக்கு, தயிர் பச்சடியுடன், புதினா துவையல், மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, கிரேவி, அசைவம் வேண்டாதவர்கள் உருளைக்கிழங்கு குருமா, காலிபிளவர், பட்டாணி குருமா வைத்தும் சாப்பிடலாம்.

Leave a Reply