கோவை, போத்தனூர் சிட்கோ குறிச்சி வீட்டுவசதி பிரிவை சேர்ந்தவர் ராஜவேல் (வயது44). பிரபல வக்கீல். இவருடைய மனைவி மோகனா (40). மோகனா ஒடிசா மாநிலத்தில் ‘ரைட் மேக்ஸ்’ என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.  திடீரென்று அந்த நிறுவனம் மூடப்பட்டது. அதில் முதலீடு செய்யப்பட்ட ரூ.12 கோடி மோசடி செய்யப்பட்டது. இதன் பின்னர் மோகனா தலைமறைவாகிவிட்டார். இதுதொடர்பாக ஒடிசா மாநில போலீசார் 5 வழக்குகளை பதிவு செய்து தலைமறைவான மோகனாவை தேடி வந்தனர். இந்த வழக்கில் இருந்து மனைவி மோகனாவை தப்பிக்க வைக்க கொடூரமான முறையில் வக்கீல் ராஜவேல் சதித்திட்டம் தீட்டினார். அந்த சமயத்தில் கோவை ரத்தினபுரி, சிவானந்தகாலனியை சேர்ந்த மாரிமுத்து என்பவருடைய மனைவி அம்மாசை (வயது45) என்ற பெண், பாதிரியார் ஜான்பால் என்பவர் மூலம் வக்கீல் ராஜவேலிடம் அறிமுகம் ஆனார்.

இதன்படி கடந்த 11.12.2011 அன்று அம்மாசையை மாலை 6 மணிக்கு கோவை கோபாலபுரத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு வக்கீல் ராஜவேல் வரச்சொன்னார். இதனை நம்பிய அம்மாசையும் அங்கு வந்தார். அப்போது வக்கீலின் அறையில் மேலும் 2 பேர் உட்கார்ந்து இருந்தனர்.  வக்கீல் சைகை காண்பிக்கவே, அவருடைய கூட்டாளிகளான பொன்னரசு, டிரைவர் பழனிசாமி ஆகியோர் அம்மாசையின் கழுத்தை சேலை மற்றும் மின்சார வயரால் இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் அம்மாசையின் உடலை காரில் ஏற்றி போத்தனூரில் உள்ள வக்கீல் ராஜவேலின் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.
அதன்பின்னர் போத்தனூரில் உள்ள வீட்டை வக்கீல் ராஜவேல் காலி செய்தார். பின்னர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக்கு வக்கீல் ராஜவேல் குடும்பத்துடன் குடியேறினார். மனைவி மோகனாவை சிறிது காலம் தலைமறைவாக இருக்குமாறு வக்கீல் ராஜவேலு கூறியதை தொடர்ந்து மோகனா தலைமறைவாக இருந்தார். இந்தநிலையில் சமீபத்தில் கோவை ராமநாதபுரத்தில் மணிவேல் என்பவர் சொத்துக்காக கடத்தி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அம்மாசையை கொன்றதும் வக்கீல் ராஜவேல்தான் என்ற திடுக்கிடும் தகவலையும் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவாகிவிட்ட வக்கீல் ராஜவேலையும், அவருடைய மனைவி மோகனாவையும் தேடி வந்தனர்.
இந்த படுகொலை தொடர்பான விவரங்களை தெரிவித்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன், கொலைவழக்கை துப்பு துலக்கிய தனிப்படையை பாராட்டினார். மேலும் அவர் கூறும்போது, இந்த கொலை தொடர்பாக முதல் குற்றவாளியாக வக்கீல் ராஜவேல் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், ஏற்கனவே மணிவேல் என்பவர் கொலையில் தேடப்படும் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply