திருவனந்தபுரம்: வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவதற்கு உடந்தையாக இருந்த கொச்சி விமான நிலைய சுங்கத் துறை உதவி கமிஷனரை சிபிஐ கைது செய்தது. தங்கத்துக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து துபாய், குவைத் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, கேரளாவில் உள்ள கொச்சி மற்றும் கோழிக்கோடு விமான நிலையங்கள் வழியாக அதிகளவில் தங்கம் கடத்தப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் இங்கு 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது.கடந்த மாதம் கொச்சி விமான நிலையத்தில் பர்தாவுக்குள் மறைத்து 20 கிலோ தங்கம் கடத்தியதாக 2 பெண்கள் உள்பட 4 பேர் சிக்கினர். இது தொடர்பாக கோழிக்கோட்டை சேர்ந்த ஹயாஸ் என்பவரை சுங்கத் துறையினர் கைது செய்தனர். தற்போது, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ஹயாசிடம் சிபிஐ நடத்திய விசாரணையில், தங்கம் கடத்தலுக்கு கொச்சி, கோழிக்கோடு விமான நிலைய சுங்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில், கொச்சி விமான நிலைய சுங்கத்துறை உதவி கமிஷனர் அனில்குமாரை சிபிஐ நேற்று கைது செய்தது. தங்கம் கடத்தலுக்காக ஹயாசிடம் இவர் லட்சக்கணக்கில் லஞ்சம்  வாங்கியுள்ளார். அவர் கொச்சி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply