ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏற்காடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் முடிந்துவிட்டது. திமுக சார்பில் அந்தத் தொகுதியிலே முகாமிட்டவர்கள் எல்லாம் சொந்த ஊர் திரும்பி விட்டனர். நானும், பொதுச்செயலாளர் அன்பழகனும் உடல்நிலை காரணமாக பிரச்சாரத்துக்கு செல்லவில்லை. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அங்கேயே தங்கி கிராமம் கிராமமாகச் சுற்றி வந்திருக்கிறார்.
விவசாயிகளின் வேதனையை கேட்க வேண்டியதில்லை. மின்வெட்டு மீண்டும் ஆரம்பமாகி விட்டது. தொழில் நிறுவனங்கள் திணறுகின்றன. தேர்வு வாரியங்கள் நடத்தும் தேர்வுகளில் ஏராளமான குளறுபடிகள். ஏற்கனவே திமுக அரசு தீட்டிய திட்டங்களுக்கெல்லாம் மூடு விழா நடத்துகிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் பாடம் கற்பிக்க வேண்டாமா? அதற்கொரு வாய்ப்பாக நடக்க இருப்பதுதான் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில் முக்கிய எதிர்க் கட்சிகள் போட்டியிடவில்லை. எனவே, இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பாடம் கற்பிக்க, திமுகவுக்கு வாக்களித்து வெற்றி தேடித் தரவேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply