திமுக தலைவர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி (6-வது பாகம்) புத்தக வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார்.

புத்தகத்தை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். நிறைவாக திமுக தலைவர் கருணாநிதி ஏற்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-
நெஞ்சுக்கு நீதி புத்தக வெளியீட்டு விழாவில் பேராசிரியர் அன்பழகன் கலந்துகொண்டது சந்தோஷமாக உள்ளது. அவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவாரோ?, வரமாட்டாரோ? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. தற்போது, சந்தோஷமாக இருக்கிறது.

துன்பங்கள் என்னையும், திமுகவையும் தொட்டபோது, கவிஞர் வைரமுத்து நம்மோடு இருப்பாரா? என்று பலரும் கேட்டதுண்டு. அவர்களிடம் நிச்சயம் இருப்பார் என்று கூறினேன். பொதுவாக இந்த இயக்கத்தில் இருந்து கவிஞர்கள் காணாமல் போய்விடுவதுண்டு. அது ஒரு சாபகேடு. அப்படி போனவர்கள் திரும்பி வந்ததும் உண்டு. இது என்னை பிடித்த சாபக்கேடு. நான் பிறந்த 1924-ம் ஆண்டு முதல் 1969 வரை நெஞ்சுக்கு நீதி முதல் பாகமும், 1969 முதல் 1976-ம் ஆண்டு வரை நடந்த நிகழ்வுகளை 2-ம் பாகமாகவும் தொகுத்துள்ளேன்.
1976-ம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தோம் என்று காரணம் காட்டி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதேபோல், சந்திரசேகர் பிரதமராக இருந்தபோதும் விடுதலைப்புலிகளுக்கு திமுக அரசு உதவியதாக கூறி, திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

அப்போது, திமுக அரசை கலைக்க வேண்டும் என்று தூண்டிவிட்டவர் யார் என்பதை நான் சொல்ல தேவையில்லை. கவர்னரின் கருத்து கேட்காமலேயே ஆட்சி அப்போது கலைக்கப்பட்டது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இலங்கை தமிழர் பிரச்சினையில் நாங்கள் எதையும் செய்யவில்லை என்று இங்கே சிலபேர் சொல்கிறார்களே, அவர்களுக்காகத்தான் இதை சொல்கிறேன்.

நெஞ்சுக்கு நீதி 6-ம் பாகமாக வந்துள்ளது. 7-வது பாகம் உண்டா என்பது எனக்கு தெரியாது. இயற்கைக்குத்தான் தெரியும். இயற்கை வழிகொடுத்தால் 9-ம் பாகம் கூட வெளிவரும்.

நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோதெல்லாம் சட்டசபைக்கு போய் வந்துள்ளேன். ஆனால், கடந்த ஓரிரு ஆண்டுகாலமாகத்தான் நடக்க முடியாத காரணத்தால், சட்டசபையில் எனக்கு இடவசதி செய்து கொடுக்காததால் என்னால் சட்டசபைக்கு செல்லமுடியவில்லை.

இருப்பினும் மக்கள் தொண்டு ஆற்றிவருகிறேன். இந்த தொண்டு தொடரும். சட்டசபை சென்று பேசினால் குண்டு கட்டாக தூக்கிப்போடக்கூடிய நிலைக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக மட்டுமல்ல, கழக தோழர்கள் இதன் மூலம் கொதிப்பும், வேதனையும் அடைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். தமிழகத்தில் அரசியல் நாகரீகம் எப்படி இருக்கிறது என்பதை கோபாலபுரம் வந்து பார்த்தால் உங்களுக்கு தெரியும். அங்குள்ள விளம்பர பாதகைகளை நீங்கள் பார்த்து அரசியல் நாகரீகத்தை தெரிந்துகொள்ளலாம்.

நாங்கள் மக்களைப் பற் றி கவலைப்படுகிறோம். ஆனால், நீ யார் கவலைப்பட என்று கேட்கிறார்கள். ஆனால், மக்கள் பணி ஆற்றுவதில் எங்களை பிரித்துவிட முடியாது. ஒரு சமுதாய இயக்கமாக உருவாகி, அரசியல் இயக்கமாக திமுக திகழ்கிறது. அரசியல் இயக்கம் என்று சொல்லும் போதே பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி, யாருடன் சேர்வீர்கள் என்ற கேள்விகளும் கேட்கத் தோன்றும்.

யாருடன் சேர வேண்டும், யாருடன் சேரக்கூடாது என்பதை கடந்த கால நிகழ்வை சிந்தித்து பார்த்து பொதுக்குழுவில் விவாதிப்போம். பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை 21-ந் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் கூட்டம் நடத்தி மக்கள் மத்தியில் விளக்கி பேச வேண்டும். யாருடன் கூட்டு என்று கேட்பவர்களுக்கு அணி உண்டு, எந்த அணி என்று இப்போது சொன்னால் பிணியாகிவிடும். ஆனால், திமுக பலமான அணியாக இருக்கும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

Leave a Reply