தமது பேட்டியை திரித்து வெளியிடும் பத்திரிகைகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி பற்றி தாம் கூறிய கருத்தை திரித்து வெளியிட்டதாக கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்பதை முன்பே கூறிவிட்டதாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி குறிப்பிட்டார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்கனவே திமுக அணியில் உள்ள கட்சிகளுடன் இணைந்தே போட்டியிடப் போவதாகவும் விளக்கம் அளித்தார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்த அவர், திமுக அணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏன் வரவில்லை என்பது பற்றி தமக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டார். பிரதமர் பதவிக்கு ஜெயலலிதாவை அதிமுக முன்னிறுத்தியுள்ளதே என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு இருந்தால் அதை தடுக்கவா முடியும் என்று பதிலளித்தார்.

மூன்றாவது அணி வருமா என்ற கேள்விக்கு தாம் ஜோதிடம் பார்ப்பதில்லை என்று பதிலளித்தார். தற்போது நிலவி வரும் அரசியல் சூழலை தாம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், டெல்லியில் சிறப்பான வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு பாராட்டு தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.

Leave a Reply