இலங்கை போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து லண்டனில் இருந்து வெளியாகும் “ஏசியன் லைட்’ என்னும் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், முதலில் இலங்கை போர்க் குற்றம் குறித்து விரிவான, நம்பகத்தன்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். போர்க்குற்றம் குறித்து வரும் மார்ச் மாதத்திற்குள் விசாரணையை தொடங்க வேண்டும் என்று ராஜபட்சவை சந்தித்தபோது வலியுறுத்தினேன். அப்படி இல்லையெனில், ஐ.நா. சபை மூலமாக சர்வதேச விசாரணையை நாங்கள் கோருவோம் என்று தெரிவித்தேன்.

இலங்கையில் பேச்சு சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழர்களும், சிங்களர்களும் சரிநிகர் சமமாக வாழ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, பழைய காயத்தை குணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், இலங்கையின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என்றார் கேமரூன்.

இந்த கோரிக்கையை டேவிட் கேமரூன் இதற்கு முன்பு வலியுறுத்தியபோது, இலங்கை அரசு நிராகரித்து விட்டது.

Leave a Reply