வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட முதலில் நேர்மையான தேர்தல் நடத்த அனைத்து போட்டியாளர்களும் ஒத்துழைக்க வேண்டுமென கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமலஹாசன் தனது சக போட்டியாளர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கமல்ஹாசனின் அன்பு வணக்கம். தேர்தல் என்பது போர்க்களம் அல்ல, அது இரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் அல்ல. வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரு முனைகளை மட்டுமே தேர்தல் முடிவு என கருதிக் கொள்ளக்கூடாது என நான் என் சகாக்களிடம் அடிக்கடி தெரிவிப்பேன்.

கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் நடைபெறவிருக்கும் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அமைதியாகவும் நிகழ வேண்டும் என விரும்புகிறேன். யார் வென்றால் தனக்கு நல்லது என மக்கள் நினைக்கிறார்களோ, அவர்கள் வெல்லட்டும் நம்மில் யார் வென்றாலும் கோவை தெற்கு தொகுதி மக்கள் வென்றதாக பொருள்

எல்லோரும் மக்கள் பணி செய்யவே வந்திருக்கிறோம். வென்றவரோடு போட்டியிட்ட அனைவரும் தோள் கொடுத்தால் அது மிகப்பெரிய ஜனநாயக பண்பாடாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்த தேர்தலில் ஜனநாயக முறைப்படி நேர்மையாக நிகழ நாம் அனைவருமே ஒத்துழைக்கவேண்டும். ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய நகர்வில் கோவை தெற்கு இந்தியாவிற்கு வழிகாட்ட வேண்டும் என விரும்புகிறேன். உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்’

இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *