தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கள்ளர் பசுபதிகோவில் பெரிய தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 50). இவரது மனைவி விமலா. இவர்களது மகள் தினா (17). இவர் தஞ்சை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். ரவிச்சந்திரன் தஞ்சை நகர கிழக்கு போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். தினாவுக்கும், அவருடன் படித்த தஞ்சை கரந்தையில் உள்ள புதுநகர் பகுதி பூக்குளத்தை சேர்ந்த மகேஸ்வரன் (19) என்ற மாணவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் மனமுடைந்த மகேஸ்வரன் கடந்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதி பட்டுக்கோட்டை பைபாஸ் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் தினா மனமுடைந்து காணப்பட்டார். மேலும் அவர் கடந்த 1 மாதமாக கல்லூரிக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மீண்டும் படிக்க விரும்புவதாகக் கூறி கல்லூரிக்கு சென்றார். நேற்று காலையில் வழக்கம்போல் தினா கல்லூரிக்கு புறப்பட்டார். அவரை ரவிச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்று கல்லூரியில் விட்டுவிட்டு வந்தார். காதலனை இழந்து மிகவும் மனவருத்தத்துடன் காணப்பட்ட தினா கல்லூரியில் இருந்து புறப்பட்டு அவரது காதலன் மகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்ட அதே இடத்திற்கே வந்தார். அங்கு நீண்டநேரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எர்ணாகுளம் விரைவு ரெயில் வந்து கொண்டிருந்தது. காதலனை இழந்து வாழ்வில் வெறுப்படைந்த தினா திடீரென ரெயில் முன் பாய்ந்தார். இதில் தினா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தினாவின் உடலை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தினர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். தனது மகளின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. பின்னர் தினாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply