shadow

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்த நீதிபதி பதவி விலகியது ஏன்?

ஐதராபாத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு மே 18ந்தேதி சார்மினார் என்றா பகுதி அருகில் இருந்த மெக்கா மசூதியில் தொழுகை நடந்த போது திடீரென சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 58 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பின் போது வெடிக்காத 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிலும் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள் என்று இந்து அமைப்பை சேர்ந்த அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் செயத்ரி உள்ளிட்ட 8 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றம் சாட்டியது.

குற்றவாளிகளில் சுனில் ஜோஷி விசாரணையின் போதே படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி சந்தீர் வி. டங்கே, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராம்சந்திர கல்சங்கரா 2 பேரும் விசாரணையில் இருந்து தப்பினர். மீதியுள்ள 5 பேர் மீது ஐதராபாத்தில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்ததையடுத்து, நேற்று தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்தது. தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, நீதிமன்ற வளாகத்திற்கு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அழைத்து வரப்பட்டு இருந்தனர். நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நண்பகல் அளவில் தீர்ப்பு அளித்த என்.ஐ.ஏ. நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதராங்கள் இல்லை என கூறி நீதிமன்றம் விடுதலை செய்வதாக அறிவித்தது.

இந்த நிலையில் குற்றவாளிகளை விடுவித்த சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தின் நீதிபதியான கே. ரவீந்தர் ரெட்டி தீர்ப்பை படித்து முடித்ததும் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். தனது பதவி விலகலுக்கான கடிதத்தினை மெட்ரோபொலிடன் செசன்ஸ் நீதிபதியிடம் ஒப்படைத்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு பெற்றுள்ளேன் என்றும் இன்று வழங்கிய தீர்ப்புக்கு இதில் எவ்வித தொடர்புமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பதவி விலகுவது பற்றி சில காலமாகவே பரிசீலனை செய்து வந்தேன் என்றும் நீதிபதி கூறிவந்துள்ளார் என நீதிமன்ற மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Leave a Reply