அமெரிக்காவின் உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த கோர்ட் நீதிபதியாக இந்தியரான சீனிவாசன் நேற்று பதவியேற்றார். சட்டப்படிப்பில் பல விருதுகளை பெற்ற அவர் பல சட்டப்பொறுப்புகளில் இருந்தவர்; தற்போது வாஷிங்டனில் உள்ள கொலம்பியா சர்க்கியூட் அப்பீல் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார்.

அவருக்கு தலைமை நீதிபதி சாண்ட்ரா டே ஓ கானர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். கோர்ட்டில் நீதிபதிகள், வக்கீல்கள் குழுமி இருக்க,  சீனிவாசன் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். விழாவில் அவர் தாய் சரோஜோ கலந்து கொண்டார். பதவியேற்கும் போது பகவத் கீதை புத்தகத்தை கையில்  வைத்தபடி சரோஜா அருகில் நின்றிருந்தார்.
பிரதமர் மன்மோகன் சிங்குடன் அமெரிக்கா சென்றுள்ள அவர் மனைவி குருசரண் கவுர், நேற்று சீனிவாசனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.

நீதிபதியாக கடந்த 2012 ஜூன் மாதம் அதிபர் ஒபாமா, சீனிவாசனின் பதவி நியமனத்தை பரிந்துரைத்தார். ஆனால், செனட் சபை ஒத்திவைக்கப்பட்டதால், மீண்டும் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் நியமனம் செய்யப்பட்டு, 97, 0 என்ற அளவில்   ஒரு மனதாக செனட்டில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.  சீனிவாசன், இதற்கு முன், அமெரிக்காவின் பிரதான துணை சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தார்.

அதற்கு முன் அமெரிக்க சுப்ரீம் கோர்ட், அப்பீல் கோர்ட்களில் பிரபலமான வக்கீலாக இருந்தார். இப்போது நீதிபதியாக பதவியேற்ற கொலம்பியா அப்பீல் கோர்ட், சுப்ரீம் கோர்ட்டுக்கு அடுத்தபடியாக அதிக அதிகாரம் படைத்த நீதிமன்றம். அமெரிக்க சட்ட வரலாற்றில், தெற்காசியாவை சேர்ந்தவர் , நீதிபதியாக பதவியேற்றது இதுவே முதன் முறை.

Leave a Reply