ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் ரேசன் பொருட்கள் கிடையாதா? அமைச்சர் விளக்கம்

ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் ரேசன் பொருட்கள் கிடையாதா? அமைச்சர் விளக்கம்

rationcard-aadharcard350 (1)ரேசன் கார்டு உடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் பொருட்கள் தரப்பட மாட்டாது என தமிழக அரசு அறிவித்ததாக நேற்று வதந்தி கிளம்பிய நிலையில் ரேசன் கார்டு உடன் ஆதார் எண் இணைப்புக்கு கால நிர்ணயம் ஏதும் இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் விளக்கம் அளித்துள்ளார். ஆதார் அட்டையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.

இதுவரை 70 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களே, ஆதார் இணைப்பை முடித்துள்ளனர். இன்னும் 30% பேர் ஆதார் அட்டை இல்லாததாலும், ஆதார் அட்டை இருந்தும் இன்னும் இணைக்காமலும் உள்ளனர். இந்நிலையில், நவம்பர் 1-ம் தேதி முதல் ஆதார் எண்ணை வழங்காத குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் விநியோகம் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் இந்த தகவல் பொய்யானது என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

மேலும் ஆதார் அட்டையை குடும்ப அட்டையுடன் இணைப்பதில் சென்னை மக்கள் பின் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் உதவி ஆணையர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில்தான் ஆதார் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இங்குள்ளவர்கள் வசதிக்காகத்தான் மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதையும் யாரும் பயன்படுத்துவதில்லை. கடையில் வந்து கார்டை வழங்கினால், உடனடியாக பதிவுசெய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. சட்டம் அறிந்தவர்களே தற்போது ஆதார் பதிவு செய்ய வேண்டும் என ஏதேனும் விதி இருக்கிறதா? என கேள்வி கேட்கின்றனர். சமையல் கேஸ் விநியோகத்துக்கு ஆதார் கட்டாயம் என்றதும் உடனடியாக கொடுக்கும் மக்கள், புதிய தொழில்நுட்பத்துக்கு தகவல்களை அளிப்பதில் தாமதம் செய்வது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. ஆதார் இணைப்பால் போலிகள் களையப்படும். இதன் மூலம் பொருட்கள் விநியோகமும் சீரடையும்” என்று கூறினார்.

Leave a Reply