வேலைதான் உங்கள் முதல் காதலி. தன்னம்பிக்கை கட்டுரை

12வேலை ஒரு மனிதனின் இருப்பை அர்த் தப்படுத்துகிறது. அவன் வாழ்க் கைக்கு அடையாளமாகவும் ஆகிறது.

“கோவை பொறியாளருக்கு கனடா அரசு விருது”, “விழுப்புரம் ஆசிரியர் மீது விசாரணை”, “லாரி மோதி வங்கி அதிகாரி படுகாயம்”, என பத்திரிகை தலைப்புகள் கூட பெயரை சொல்வதற்கு முன் அவர்களின் பணி அடையாளத்தைச் சொல்கிறது.

“பொண்ணு கம்ப்யூட்டர் சைன்ஸ் படிச்சிட்டு பெங்களூரிலே வேலை பாக் கறா. ஃபாரின் போக வாய்ப்புகள் இருக்கு. பையனும் ஐ.டி.யா இருந்தா பரவா யில்லை.” என்று வரன் தேடும்போதும் முதலில் வருவது வேலைப் பொருத்தம்.

“எப்படியோ கடனை உடனை வாங்கி படிக்க வச்சிட்டேன். அடுத்த வருசம் படிப்பு முடிஞ்சு அவன் வேலைக்கி போனா எல்லா கஷ்டமும் விடிஞ்சிடும்” என்று சொல்லும் பெற்றோர்களை தினம் சந்திக்கிறோம்.

ஒருவர் வேலைக்குப் போனால் அவர் சார்ந்த குடும்பத்தின் நிலை பெரிதாக உயரும் என்பது இந்தியாவை போன்ற ஏழை நாட்டின் நிதர்சனம்.

என்ன வேலைக்கு போவது என்ற சிந்தனை குடும்ப சூழ்நிலை சார்ந்து வருகிறது. பிறந்ததும் அவன் கம்ப்யூட்டர் இஞ்ஜினீயர் என பெற்றோர்கள் தீர்மானிக்கும் குடும்பங்களும் இங்கு உண்டு. “எந்த பிரிவு வேண்டும்?” என்று கவுன்சலிங்கில் கேட்கையில் “எதுல நல்ல வேலை கிடைக்குமோ அதை குடுங்க” என்று கேட்கும் பெற்றோர்களும் இங்கு உண்டு.

மாணவர்களைப் பொருத்தவரை தாங்கள் பார்த்த, கேட்ட வெற்றிக் கதைகள் வேலை பற்றிய கனவை வளர்க்கின்றன.

ஒரு சராசரி மாணவனுக்கு / மாணவிக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கவேண்டிய வேலை யைக் குறித்து தேவையான தகவல்கள் இங்கு குறைவு. பெற்றோர்கள்- படித்தவர்கள் உட்பட- மிகக்குறைவான தகவல்களையே பெற்றிருக்கிறார்கள்.

தலைவலிக்கு ஆயிரம் பேர் ஆயிரம் மருந்து கூறுவார்கள். அதில் சில குணமளிக்கவும் செய்யும். ஆனால் அது டென்ஷன் தலைவலியா, ஸ்ட்ரோக்கின் அறிகுறியா, மெனிஞ்சைடிஸ் வியாதியா என இனம் கண்டு வைத்தியம் செய்ய மருத்துவம் படித்திருக்க வேண்டும். சிகிச்சை அனுபவமும் வேண்டும். ஆனால் தலை உள்ள அனைவரும் இங்கு தலைவலிக்கு ஒரு மருந்து சொல்வார்கள். யாரிடம் தகவல், ஆய்வு, ஆலோசனை பெறுகிறீர்கள் என்பதை பொறுத்துதான் தீர்வு.

எந்த தொழில் படிப்பிற்கு என்ன கல்வித் தகுதி தேவை என்பதை கல்வி ஆலோசகர்கள் வழங்குவர். நம் ஆளுமை, திறன், அறிவு, ஆர்வத்திற்கு ஏற்ற தொழில் எது என்பதை அறிய உளவியல் ஆய்வாளர்கள் உதவுவர். படித்தபின் எந்த வேலைக்கு எப்படித் தன்னை தயார் செய்து கொள்வது, வேலைத்திறமைகளை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை மனித வள ஆலோசகர்கள் வழிகாட்டுவர். இது தவிர, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த வல்லுநர்கள் அந்த துறையின் சாதக பாதகங்களை விளக்கி கூடுதல் தகவல்கள் தரலாம். இதுதான் முறையான தேடலுக்கான வழி.

மேலை நாடுகளில் இந்த Career Counseling என்பது மிக பிரபலம். உளவியல் ஆலோசகர்கள் எல்லா பள்ளிகளிலும் உண்டு.

இங்கு நல்லா படிப்பவர்களுக்கு முதல் இரண்டு சயின்ஸ் குரூப்புகள், மத்திய தரம் என்றால் காமர்ஸ் அல்லது ஆர்ட்ஸ் பாடங்கள், எதுவும் வரவில்லை என்றால் தொழில் படிப்புகள் என்று ஒரு நவீன வர்ணாசிரம முறை நிலவுகிறது.

ஒரு புறம் திறமையான நபர் களுக்கு சரியான வேலைகள் இல்லை. இன்னொரு புறம் பல வேலைகளுக்கு ஆட்களே இல்லை. இந்த இடைவெளியை குறைக்க, தமிழ் கூறும் நல்லுலகம் வேலை ஆலோசனை பற்றி அதிகாரப் பூர்வமான தகவல்கள் பெறத்தான் இந்த எழுத்து முயற்சி.

பள்ளி மாணவர்களுக்கு என்ன படித்து என்ன ஆவது என்ற குழப்பம். கல்லூரி மாணவர்களுக்கு படிக்கும் படிப்பிற்கு வேலை கிடைக்குமா என்ற கவலை. வேலையில் சேர்ந்தோர்க்கு இந்த வேலை சரியா, வேறு வேலை தேடணுமா என்கிற நெருடல். இப்படி எல்லோரும் வேலை சார்ந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் தவித்து கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு இளைஞரையும் தன்னை திறமையாக கூர்படுத்திக் கொள்ள இந்த உளவியல் ஆலோசனைத் தொடர் வழி செய்யும். காதல் திருமணமா, நிச்சயித்த கல்யாணமா எது சிறந்தது என்று பார்ப்பதை விட கல்யாணத்திற்கு பின் வாழ்க்கைத் துணையைக் காதலிக்கிறோமா என்பதுதானே முக்கியம்? என்ன படிக்கிறீர்கள், என்ன வேலை பார்க்கிறீர்கள் என்பதை விட வேலையை காதலிக்கிறீர்களா என்பது தானே முக்கியம்?

கல்யாணத்திற்கு முன் காதலியுடன் செலவுசெய்யும் காலத்தை விட, கல்யாணத்திற்குப் பின் மனைவியுடன் செலவுசெய்யும் காலத்தை விட உங்கள் வேலையுடன் நீங்கள் செலவுசெய்யும் காலம் மிக மிக அதிகம்.

அதனால் உங்கள் காதலியைத் தேர்ந் தெடுப்பதை விட வேலையைத் தேர்ந்தெடுப் பதில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயிப்பதில் உங்கள் வேலை தானே பெரும்பகுதியாக அமைகிறது?

Leave a Reply