விவிலிய வழிகாட்டி: புயலை அடக்கிய பெருமகன்

jesus_2626157f

இயற்கையின் எல்லாப் பக்கங்களையும் தெரிந்துகொண்டு அதைக் கட்டுப்படுத்தத் துடிக்கிறான் மனிதன். ஆனால் அவனது அறிவுக்கு எட்டாத, கட்டுப்படாத அம்சமாக அது இருக்கிறது. மிக முக்கியமாக மனிதனின் அகந்தையைத் தன் பிரமாண்டத்தாலும் விடை காண முடியாத ரகசியங்களாலும் சுக்கு நூறாக்கிவிடுகிறது. இருப்பினும் இயற்கை கடவுளின் சேவகன் என்பதை அவன் மறந்துவிடுகிறான்.

கடவுளுக்கு மட்டுமே அது கட்டுப்படும் என்பதை அறிந்தும் அறியாமலும் அதனுடன் தொடர்ந்து மோதுகிறான். இயேசுவின் வடிவில் பூமியின் மனிதனாகப் பிறந்த கடவுள் புயலை அடக்கினார். சீற்றம் கொண்டு எழுந்த இயற்கை இயேசுவின் வார்த்தைகளுக்குப் பணிந்த அற்புத நிகழ்வு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

போதனைகளும் கலிலேயா கடலும்

சிறந்த வாழ்முறை பற்றிய போதனைகள் மற்றும் அற்புதங்கள் நிகழ்த்திய இயேசுவின் பூமி வாழ்வுடன் அதிகம் தொடர்புகொண்டதாக இருக்கிறது கலிலேயக் கடல் (Sea of Galilee). இஸ்ரேல் நாட்டில் இயற்கையின் கொடையாக இருக்கும் இது, மனித இதயம் போன்ற வடிவம் கொண்டது. 23 கிலோமீட்டர் நீளமும் 13 கிலோமீட்டர் அகலமும் 700 அடிகள் ஆழமும் கொண்டு 166 சதுர கிலோமீட்டர் கிலோ மீட்டருக்குப் பரந்து விரிந்திருக்கும் இந்தப் பேரேரி விவிலிய வரலாற்றில் சிறப்பான பங்கினை வகிக்கிறது.

இயேசுவின் போதனைகளில் ‘மலைப்பொழிவு’ போதனை மிகவும் முக்கியமானதாகவும் புகழ்பெற்றதாக இருக்கிறது. திரளான மக்கள் கூட்டத்தின் முன்பு இந்தப் போதனையை நிகழ்த்த ஒரு மலைக்குன்றின் மீது ஏறி அமர்ந்தார் இயேசு.‘செர்மோன் ஆஃப் மவுண்ட்’ என்று அழைக்கப்படும் இந்த மலைக்குன்று கலிலேயக் கடற்கரை அருகில்தான் இருக்கிறது.

இயேசு இறைபணி செய்த காலத்திலேயே மிகவும் பேர்போன இடமாக கலிலேயக் கடல் இருந்தது. ‘கடலோர நெடுஞ்சாலை’(Via Maris) என்ற பெயர்கொண்ட வணிகப் பாதை அவ்வழியே சென்று, எகிப்து நாட்டையும் வடக்கு அரசுகளையும் இணைத்தது. கலிலேயக் கடல், மலைகளில் உற்பத்தியாகும் நதிகளால் நீர்வளம் பெரும் ஒரு நன்னீர் கடலாகும். இதன் கரையில்தான் ரோமானியர்கள் பல நகரங்களை நிறுவினர். கதாரா (Gadara), ஹிப்போஸ் (Hippos), திபேரியாஸ் (Tiberias) என்னும் அந்நகரங்களில் வாணிபம் செழித்து வளர்ந்தது.

இயேசு பலமுறை கலிலேயக் கடலுக்கு வந்துள்ளார். இதன் கடைநெடுகிலும் ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்த மீனவர் குடியிருப்புகள் நிறைந்திருந்தன. இயேசு தமது முதல் சீடர்களை அழைத்தபோது, இக்கடலில்தான் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர் (மத்தேயு 4:18-22; மாற்கு 1:14-20; லூக்கா 5:1-11). மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்சென்றவர்கள் பேதுருவும் அவர்தம் உடன்பிறந்த சகோதரர்களான அந்திரேயா மற்றும் யோவான், அவர்தம் சகோதரர் யாக்கோபு ஆகியோரும் அடங்குவர்.

கட்டுப்பட்ட புயல்

ஒருமுறை கலிலேயக் கடற்கரையில் காலைமுதலே போதனை செய்துகொண்டிருந்தார். மாலை நெருங்கியதும் மானுட மகனுக்கு களைப்பு ஏற்பட்டது. மாலை நெருங்கியும் தன்னை விட்டு நீங்கி தத்தம் வீடுகளுக்குச் செல்லாமல் திரளான மக்கள் சூழ்ந்திருப்பதைக் கண்டு, கலிலேயக் கடலின் மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, “போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார். இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்கு குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.

இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, “ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும். அவர் இறந்துவிட்டார்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்றார்.

பின்பு இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள். திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். சீடர்கள் பயந்து அலறிஅவரிடம் வந்து, “ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.

கண்விழித்த இயேசு அவர்களை நோக்கி, “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டபடி, எழுந்து நின்றவர் காற்றையும் கடலையும் அதட்டிக் கடிந்துகொண்டார். உடனே கடலில் மிகுந்த அமைதி உண்டாயிற்று. சீடர்கள் அனைவரும், “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே! இவர் எத்தகையவரோ?”(மத்தேயு 8:23 27) என்று வியந்தனர்.

அருகிலிருக்கும் ஆறுதல்

இயற்கை நம் மீது தாக்குதல் தொடுக்கும்போதெல்லாம் நாம் வாடிவிடுகிறோம். நம் அருகில் கடவுள் இருக்கிறார் என்று தெரிந்தும் நாம் மரணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுகிறோம். ஆபத்தான பேரிடர் நேரத்தில் நமக்கு ஆறுதலாக இருக்கிறவரும், அமைதிமையத்தருகிறவரும் நம் ஆண்டவர் என்கிற செய்தி, இந்த விவிலியப் பதிவு வாயிலாக நமக்கு வெளிப்படுகிறது.

இயேசுவின் சீடர்களுக்கு அவர்கள் மீன்பிடித்து வாழ்ந்த கலிலேயக் கடலைப்பற்றி நன்றாகத் தெரியும். கலிலேயக் கடல், விசித்திரங்களுக்குப் பெயர் பெற்றது. திடீர், திடீர் என்று புயலாலும், சூறைக்காற்றாலும் மழையாலும் பயமுறுத்தக்கூடியது இந்தக் கடல். அது அமைந்திருக்கின்ற புவியியல் அமைப்புதான் இத்தகைய உடனடி பருவநிலை மாற்றத்துக்குக் காரணம். இதை மீறியே இக்கடலில் வளிதொழில் ஆள்கிறார்கள் மீனவர்கள். திடீர் புயலின் வேகத்தைக் கண்டதும் தாங்கள் சாகப்போகிறோம், என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. எல்லாமே கைமீறிப் போய்விட்டது. இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற நிலை வந்தபிறகே உறங்கிக்கொண்டிருந்த இயேசுவை அவர்கள் சரணடைகிறார்கள்.

அதுவரை, தாங்களே அதனை எதிர்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். இயேசுவை மறந்து விடுகிறார்கள். நமது வாழ்விலும் இதுதான் நடக்கிறது. நம்மால் முடியாமல் நிலைமை கைமீறுகிறபோதுதான், நாம் கடவுளைத் தேடுகிறோம். அது தூய இறை நம்பிக்கையாக இருக்க முடியாது. எப்போதும் கடவுள் என்னோடு இருக்கிறார்; எத்தனை துன்பத்திலும் அவர் என்னைக் காப்பார் என்ற நம்பிக்கையும் நம்மைக் காக்கும்.

Leave a Reply