இலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் கூறியிருப்பதாவது, இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் உள்நாட்டு போர் முடிந்த பிறகு தமிழர்களுக்கு எதிராக நடந்து வரும் அத்துமீறல்களால் தமிழ்நாட்டில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களிடமும் ஏற்பட்டுள்ள ஆழமான உணர்வு பற்றி உங்களுக்கு நான் கடந்த 2 ஆண்டுகளில் பல தடவை கடிதம் எழுதி விட்டேன். இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இந்தியா கடும் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட சபையிலும் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தற்போதைய இலங்கை அரசு, கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது காரணமற்ற கொள்கையை காட்டி, மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்துகிறது. நடுக்கடலில் தாக்கப்பட்டு, சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்படும் மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது சிறைக்காவல் நீட்டிக்கப்படுகிறது.

தமிழக மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இலங்கை பறிமுதல் செய்து முடக்கி வைத்துள்ளது. இதனால் தமிழக மீனவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தினரும் தமிழக மீனவர்கள் கடத்தி சிறை வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள வெலிங்டனில் இருக்கும் ராணுவ பயிற்சி கல்லூரியில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சி கொடுப்பதற்கு தமிழ்நாட்டு மக்களிடம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அது பற்றி நான் உங்களுக்கு 16.7.2012, 25.8.2012, 28.8.2012 மற்றும் 8.6.2013 ஆகிய தேதிகளில் எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டிருந்தேன்.

அதில், “தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடந்து வரும் தாக்குதல்களை நிறுத்தும் வரை மற்றும் இலங்கையில் சிறுபான்மை தமிழர்கள் மீது நடந்து வரும் மனித உரிமை மீறல் செயல்களை முழுமையாக நிறுத்தும் வரை இலங்கை ராணுவப்படைகளுக்கு பயிற்சியோ அல்லது எந்த வடிவலான ஒத்துழைப்பும் கொடுக்கக் கூடாது” என்று வலியுறுத்தி இருந்தேன். மேலும் இது தொடர்பாக தெளிவான கொள்கை உத்தரவுகளை மத்திய ராணுவ அமைச்சகத்துக்கு தாங்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தேன்.

இலங்கைக்கு போர் கப்பல்களை இந்தியா கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று 11.9.2013 அன்று எழுதி இருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். இலங்கை ராணுவத்துக்கு எந்த வடிவத்திலும் உதவக் கூடாது என்பதை உறுதி செய்யவும் கோரி இருந்தேன்.
சமீபத்தில் 30.11.2013 அன்று எழுதிய கடிதத்தில், இந்திய கடற்படை வீரர்களுக்கான 4 ஆண்டு பி.டெக் பயிற்சி படிப்பில் இலங்கை கடற்படை வீரர்களையும் சேர்க்க இந்திய கடற்படை தளபதி செய்த பரிந்துரைக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தேன்.

இந்த நிலையில் இலங்கையில் திரிகோணமலை கடல் பகுதியில் 2013 டிசம்பர் 21-ந்தேதி தொடங்கும் கடலோர பாதுகாப்பு பயிற்சியில், இந்தியா சார்பில் இந்திய கடலோர படை கப்பல்களும், கடற்படை வீரர்களும் பங்கு பெறுவதாக பத்திரிகைகளில் வெளி வந்துள்ள செய்திகளை கண்டு நான் கடும் அதிர்ச்சி அடைந்தேன். இது முழுக்க, முழுக்க தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வுகளுக்கு எதிரானது.

தமிழ்நாடு சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் மற்றும் தமிழக மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களை பற்றி மத்திய அரசு தெளிவில்லாத நிலையில்தான் உள்ளது.

தமிழர்களின் உணர்வை மதிக்காமல் இந்திய அரசு தனது கொள்கை நோக்கில் தொடர்ந்து இலங்கைக்கு சாதகமாகவே நடந்து வருகிறது. உண்மையில் இந்திய அரசு, ராணுவ பயிற்சி விஷயங்களில் இலங்கைக்கு வெளிப்படையான ஒத்துழைப்பை கொடுக்கிறது.

இலங்கை கடற்படையும் தொடர்ந்து அப்பாவி தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள், சட்ட விரோத கடத்தல், சித்ரவதைகள், நீண்டகால சிறை வைப்பு போன்றவைகளை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய ராணுவ ஒத்துழைப்பால் இந்திய அரசு தன் சொந்த மக்களை, சிறுபான்மை தமிழக மக்களை தவிக்க வைத்துள்ளது.

அவர்கள் மீது மிக கடுமையான மனித உரிமை மீறல்கள் நடத்துகின்றன. இது கொடுமையானது. கண்டனத்துக்குரியது.

இலங்கையுடனான இந்திய அரசின் இத்தகைய ராணுவ ஒத்துழைப்பு கொள்கைக்கு நான் கடும் எதிர்ப்பை தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய அரசின் கொள்கையில் தமிழக கடலோர மக்களுக்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டு, அவர்களது வாழ்வாதார உரிமை நசுக்கப்பட்டுள்ளது.

கடலோர மக்களின் உணர்வை இந்திய அரசு முற்றிலுமாக புறக்கணித்து விட்டது. எனவே இலங்கையுடனான இந்தியாவின் ராணுவ ஒத்துழைப்பு கொள்கையை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இலங்கையில் நடக்கும் கடலோர பாதுகாப்பு பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ள இரண்டு இந்திய போர்க் கப்பல்களையும், கடற்படை வீரர்களையும் அதில் பங்கேற்காமல் உடனே திரும்ப அழைக்க பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply