ஒரே ராக்கெட்டில் 82 செயற்கைக்கோள்கள். உலக சாதனைக்கு தயாராகிறது இஸ்ரோ

ஒரே ராக்கெட்டில் 82 செயற்கைக்கோள்கள். உலக சாதனைக்கு தயாராகிறது இஸ்ரோ

satellitesஇந்திய விண்வெளித்துறை விஞ்ஞானிகள் இந்த ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் மூலம் 1,288 கிலோ எடைகொண்ட 22 செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்த நிலையில் தற்போது ஒரே ராக்கெட்டில் 82 செயற்கைகோள்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக நடந்தால் இந்தியாவின் இஸ்ரோ உலக சாதனை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014-ம் ஆண்டு ரஷியா ஒரே ராக்கெட்டில் 37 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இதனையடுத்து அமெரிக்க விண்வெளி மையம் கடந்த 2013ஆம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 29 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி இரண்டாம் இடத்தை பெற்றது.

இந்நிலையில் ஒரே ராக்கெட்டில் 82 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இஸ்ரோவின் செவ்வாய் விண்வெளி திட்ட இயக்குனரும், விஞ்ஞானியுமான சுப்பையா அருணன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர்.

ஒரே ராக்கெட்டில் செலுத்தப்படும் 82 செயற்கைகோள்களில் அமெரிக்காவுக்கு சொந்தமான 60 செயற்கைகோள்களும், ஐரோப்பிய நாடுகளுக்கு சொந்தமான 20 செயற்கைகோளும், இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான 2 செயற்கைகோள்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்கைகோள்களை 2017-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ராக்கெட் ஏவப்பட்டு 25 நிமிடங்களில் 580 கிலோ மீட்டர் தூரத்தில் அவை நிலை நிறுத்தப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.