shadow

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த PSLV C34 செயற்கைக்கோள். இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை
pslv
உலக விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. இன்று காலை சரியாக 09:26 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, 20 செயற்கைக் கோள்களை ஏந்திய PSLV C34 என்ற விண்கலன் விண்ணை நோக்கி வெற்றிகரமாக  ஏவப்பட்டுள்ளது. இந்த விண்கலம் வெற்றிகரமான பாதையில் பயணித்து கொண்டிருக்கின்றது என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த பெருமைக்குரிய விஷயம் ஆகும்.

PSLV C34-ன் வெற்றிக்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த மகத்தான சாதனை வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி கொண்டாடி வருகின்றனர். PSLV C34 விண்கலம், விண்வெளியில் 10 மடங்கு குறைந்த செலவில் 20 செயற்கை கோள்களை செலுத்த இருக்கின்றது. மேலும் இந்த 20 செயற்கைக்கோள்களில் ஒரு செயற்கைக் கோள் சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியால் செய்தது. இன்னொன்று புனே பொறியியல் கல்லூரி மாணவர்கள் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

20 செயற்கைக் கோள்களின் மொத்த எடை 1,288 கிலோ. 26 நிமிடத்தில் 20 செயற்கைக் கோள்களும் விண்ணில் புகுத்தப்படும். இதைக் குறித்து ISRO சேர்மன் செய்தியாளர்களிடம் கூறுவதாவது: “20 செயற்கைக்கோள்கள் பறவைகள் போல விண்வெளியில் பறக்கும்! ஒவ்வொன்றும் விண்ணில் செல்லுத்தப்பட்டதும், ஒன்றோடு ஒன்று சாராமல் தங்களது பாதையில் இலக்கை நோக்கி செயல்பட துவங்கும்.

ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டதும் 26 நிமிடங்களில் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் நினைத்த பாதையில் சுழலும்.16வது நிமிடத்தில் முதல் கோள் புகுத்தப்படும்; அடுத்த 10 நிமிடங்களில் மற்ற 19 செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்படும்.

ஒரே ஏவுகணையில் அதிக செயற்கைகோளைச் செலுத்தும், இந்தியாவின் மிகப் பெரிய முயற்சி இது. ஏப்ரல் 28, 2008ல், உலகிலேயே அதிக அளவு செயற்கைக் கோள்களை (10 செயற்கைக்கோள்கள்) ஒரே ஏவுகணையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது ISRO. 2013ல், America Minotaur-1 என்ற விண்கலம் 29 செயற்கைக் கோள்களை ஒரே ஏவுகமையில் செலுத்தி நம் சாதனையை முறியடித்தது. மீண்டும், 2014ல் ரஷ்யா 37 செயற்கைக்கோளை ஒரே ஏவுகணையில் செலுத்தி சாதனை படைத்தது. தற்போது, இந்தியா குறைந்த செலவில் அதிக செயற்கைக் கோளகளை விண்ணில் செலுத்தி சாதனை படைக்கவுள்ளது.

ISROவின் இந்த புதிய முயற்சி Jeff Bezos மற்றும் Elon Musk ஆகிய பில்லினியர்களின் விண்கல நிறுவனத்திற்கு சவால் விடுவதாக உள்ளது. மொபைல் நிறுவனங்கள், இணைய சேவை மையங்கள் எனப் பல பேரின் தேவையைப் பூர்த்தி செய்ய, முழுக்க முழுக்க அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த இந்த துறை தனியார்மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அவர்கள் குறைந்த செலவில் தங்கள் ஏவுகணைகளை விடுவதால்தான். இந்நிலைக்கு ஒரு சவால் விடுகிறது நம் நாட்டு விஞ்ஞானிகளின் செயல்!

Leave a Reply