shadow

பிரேமலதாவின் சர்ச்சை பேச்சுக்கு இஸ்லாமிய அமைப்பு கடும் கண்டனம்.

premalathaதேமுதிகவின் நட்சத்திர பேச்சாளர் என்று கருதப்படும் பிரேமலதா விஜயகாந்த் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவருடைய பேச்சு தொடர்ச்சியாக சர்ச்சையை ஏற்படுத்தி வருவதால் வாக்காளர்கள் அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் குறித்து விஜயகாந்தும், எம்.ஜி.ஆர் குறித்து பிரேமலதா விஜயகாந்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் எம்.ஜி.ஆர் தொண்டர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் இஸ்லாமியர்கள் குறித்து பிரேமலதா பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு அப்பகுதி இஸ்லாமிய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேமலதா தனது பேச்சில், “தற்போது தர்மத்துக்கு அதர்மத்துக்கும் இடையே போர் நடக்கிறது. தர்மத்தின் பக்கமாக கேப்டன் இருக்கார். அதர்மத்தின் பக்கமாக மற்றவர்கள் இருக்காங்க. தமிழகத்தில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறிமாறி ஆட்சி செய்தும் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. தவறான பாதையில் சென்றவர்களின் முடிவு எப்படி ஆனது என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். பதுங்கு குழிக்குள் பல்லுடைந்து பதுங்கி இருந்த கோரமுகத்தை கொண்ட சதாம் உசேனை, ஆணவத்தின் உச்சியில் இருந்த அவனை பிடித்து இழுத்து வந்து அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி கேவலமான மரணத்தை கொடுத்ததை இந்த உலகம் மறந்திருக்காது. அதை ஆணவத்தில் இருக்கும் தலைவர்கள் அறியவில்லையா? உங்களுக்கும் இதே நிலைமை தான் ஏற்படும்” என்று பேசினார்.

சதாம் உசேன் குறித்து பிரேமலதா பேசிய இந்த பேச்சு தற்போது பெரும் சர்சையாகியுள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் பிரேமலதா இப்படி வரலாற்றை தவறாக சித்தரித்தை, இஸ்லாமிய அமைப்புகள் கண்டித்து வருகின்றன. இதுகுறித்து கருத்து கூறிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமா அத் கடையநல்லூர் பஜார் கிளைத் தலைவரான குறிச்சி சுலைமான் கூறியதாவது: ”வரலாறு என்ன என்பது கூட தெரியாமல் வாய்க்குவந்ததை எல்லாம் பிரேமலதா பேசிக் கொண்டிருக்கிறார். வரலாறாக வாழ்ந்து மறைந்தவர் சதாம். உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த அமெரிக்காவை துணிச்சலுடன் எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் அந்த நாட்டுக்கு பெரும் சவாலாக விளங்கியவர். கடைசி வரையிலும் அமெரிக்காவின் சர்வாதிகாரத்துக்கு அடிபணியாமல் துணிச்சலுடன் போர்க்களத்தை எதிர்கொண்டவர்.

கடைசியில் அமெரிக்காவின் போலியான நீதிமன்ற விசாரணையையும் வழக்கறிஞர் யாரையும் வைத்துக் கொள்ளாமல் தானே வாதாடி எதிர்கொண்டார். அந்நாட்டு நீதிமன்றம் கொடுத்த மரண தண்டனையையும் புன்முறுவலுடன் எதிர்கொண்டு துணிச்சலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார். ஆனால், இந்த வரலாறு எதுவுமே தெரியாமல், பல் உடைக்கப்பட்டு கேவலமாக கொல்லப்பட்டதாக பிரேமலதா பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது வாய்க்கு வந்ததை எல்லாம் பொறுப்பற்ற முறையில் பொது இடத்தில் பேசுவதை பிரேமலதா போன்ற அரசியல் தலைவர்கள் இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று காட்டமாக கூறியுள்ளார். பிரேமலதாவின் பேச்சு தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகி வருவதால் தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply