ஆன்மீக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி

ஆன்மீக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி

supremeஒரு மதத்தின் தலைவராக இருக்கு ஆன்மீக தலைவர் ஒருவர் குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு ஓட்டளிக்குமாறு சுயவிருப்பத்தின் பேரில் வேண்டுகோள் விடுப்பதை மதத்தின் பெயரால் வாக்கு சேகரிப்பது என்ற நோக்கத்தில் அணுகி, அதை தேர்தல் விதிமீறல் என்று கருதலாமா? என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 1990-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனைக் கூட்டணி வேட்பாளர் மனோகர் ஜோஷி வெற்றி பெற்றதை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் என்.பி.பாட்டீல், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். தேர்தல் பிரசாரத்தின்போது ஹிந்துத்துவக் கொள்கைகளுக்கு ஆதரவாகப் பேசி மனோகர் ஜோஷி வாக்கு சேகரித்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜோஷி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மனோகர் ஜோஷி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜோஷிக்கு ஆதரவாக கடந்த 1995-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தை மறு விசாரணை செய்ய முடிவு செய்தது.

இதேபோன்று 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவற்றையும் சேர்த்து விசாரிப்பது என்றும், அதனை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரை செய்வது என்றும் கடந்த 2014-ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் எம்.பி.லோகுர், எஸ்.ஏ.போப்தே, ஏ.கே.கோயல், யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் கொண்ட அமர்வு, அந்த மனுக்களை விசாரித்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:

அரசியல் கட்சிகளையோ, இயக்கத்தையோ சாராத ஆன்மிகத் தலைவர்கள் அல்லது மதக் குருமார்கள், குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்துவதை மதத்தின் பெயரால் வாக்கு சேகரிப்பது எனக் கருதலாமா? அதை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தல் விதிமீறல் என்று எடுத்துக் கொள்ள முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published.