shadow

‘இருமுகன்’ திரைவிமர்சனம்

irumuganஉளவுத்துறை அதிகாரிகளான விக்ரமும், நயன்தாராவும் சேர்ந்து லவ் என்ற மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனை கொல்வதற்காக பெரிய திட்டம் தீட்டுகிறார்கள். லவ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, மாறுவேடத்தில் அங்கு சென்று குண்டு வைத்து அவனைக் கொல்கின்றனர்.

இதன்பின்னர் காதலர்களாக இருந்த விக்ரமும், நயன்தாராவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் முடிந்த பின் மலைப்பகுதியில் இருவரும் நின்று கொண்டிருக்கும்போது, யாரே ஒருவர் நயன்தாராவை சுட்டு வீழ்த்துகிறார். குண்டடிபட்ட நயன்தாரா மலையில் இருந்து கீழே விழுகிறார்.

அதன்பின் விக்ரம் உளவுத்துறையில் இருந்து ஓய்வு பெற்று 4 வருடங்கள் கழிந்த நிலையில், மலேசியாவில் இந்திய தூதரகம் மர்ம நபர்களால் தாக்கப்படுகிறது. அந்த தாக்குலை நடத்தியது லவ் என்பது இந்திய உளவு அமைப்புக்கு தெரிய வருகிறது. லவ்வை இதுவரை யாரும் பார்த்தது கிடையாது. நயன்தாராவும், விக்ரமும் மட்டும்தான் பார்த்திருக்கிறார்கள். எனவே, லவ்வை பிடிக்க மறுபடியும் உளவுத்துறைக்கு அழைக்கப்படுகிறார் விக்ரம். முதலில் இதற்கு மறுக்கும் விக்ரம் பிறகு சில நிபந்தனைகளுடன் அந்த பொறுப்பை ஏற்கிறார்.

உளவுத்துறை அதிகாரியான நித்யாமேனனுக்கு உதவியாளராக செல்லும் விக்ரம் லவ்வை கண்டுபிடித்து எப்படி வீழ்த்தினார்? விக்ரமின் முதல் தாக்குதலில் லவ் உயிர்தப்பியது எப்படி? அவன் எதற்காக இந்திய தூதரகத்தை தாக்கினான்? என்பதே மீதிக்கதை.

அகிலன், லவ் என இருவேறு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் விக்ரம். அகிலன் கதாபாத்திரத்தில் முகம் முழுக்க தாடியுடன் வந்தாலும் பார்க்க அழகாக இருக்கிறார். உளவுத்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் தனது உடலை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளார்.

அதேபோல், லவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம், பெண்மை கலந்த ஆண் கதாபாத்திரத்தில் நளினமான அங்க அசைவுகளுடன் நடித்து அசத்தியிருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக பேசும் ஸ்டைலை வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பது சிறப்பு. நயன்தாரா முந்தைய படங்களைவிட இந்த படத்தில் மேலும் மெருகேறியிருக்கிறார். பாடல் காட்சிகளில் இவரது உடைகள் பளிச்சிடுகின்றன. அதேபோல், படத்தில் நிறைய இடங்களில் கிளாமர் உடையில் வந்து ரசிகர்களை கிளுகிளுப்பூட்டியிருக்கிறார்.

படத்தில் முக்கால் வாசி காட்சிகளில் நித்யா மேனன் வருகிறார். இருப்பினும், அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழகாக செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. மலேசியா போலீசாக வரும் தம்பிராமையா வருகிற காட்சிகளெல்லாம் காமெடியாக இருக்கிறது. சிறிய காட்சியில் வரும் கருணாகரன் தனது கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார். நாசர் வழக்கம் போல் தனக்குக் கிடைத்த சிறிய பாத்திரத்தில் நிறைவாக நடித்துவிட்டுச் செல்கிறார்

இயக்குனர் ஆனந்த் சங்கர் தனது முந்தைய படமான ‘அரிமா நம்பி’ மாதிரியே இப்படத்தையும் ரொம்பவும் திரில்லராக கொண்டு சென்றிருக்கிறார். முதல் பாதியில் உள்ள விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்று குறைந்திருக்கிறது. லவ் பயன்படுத்தும் ‘ஸ்பீட்’ என்னும் ஊக்க மருந்தின் பின்னணியும் அதன் செயல்பாடுகளும் விளக்கப்படும் காட்சி சூப்பர்.

படத்திற்கு பெரிய பலமே ஹாரிஸ் ஜெயராஜின் இசைதான். பின்னணி இசையும், பாடல்களும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. குறிப்பாக ‘ஹெலனா’ பாடல் கேட்க இனிமையாக இருப்பதோடு, அதை அழகாக காட்சிப்படுத்தி இன்னும் கூடுதல் அழகு சேர்த்திருக்கிறார்கள். மற்ற பாடல்களும் பரவாயில்லை.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மலேசியாவின் அழகு, காஷ்மீரின் அழகு எல்லாவற்றையும் இவரது கேமரா கண்கள் நமக்கு விருந்து படைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அன்பறிவு-ரவிவர்மா கூட்டணியில் அமைந்த சண்டைக் காட்சிகள் எல்லாம் அருமையாக உள்ளன. அதேபோல், சுரேஷ் செல்வராஜின் அரங்குகளும் படத்திற்கு பிரம்மாண்டம் கூட்டியிருக்கின்றன. குறிப்பாக, லவ்வின் ஆய்வுக்கூடம் மிரள வைக்கிறது. இதுதவிர கதாபாத்திரங்களின் ஆடையலங்காரமும் அருமையாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘இருமுகன்’ அதிரடிமுகன்.

Leave a Reply