shadow

indru netru naalai2065ஆம் ஆண்டு சென்னையில் உள்ள விஞ்ஞானி ஆர்யா ஒரு டைம் மிஷினை கண்டுபிடிக்கின்றார். இந்த மிஷினை சோதனை செய்து பார்க்க அவர் தன் மேலதிகாரியிடம் அனுமதி கேட்டபோது முதலில் மறுக்கும் அதிகாரி பின்னர் ஒப்புக்கொள்கிறார். டைம் மிஷினை 2015ஆம் ஆண்டு காலத்திற்கு செல்லும்படி கட்டளை விதித்துவிட்டு அது திரும்பி வரும் என காத்திருக்கும் நிலையில் திட்டமிட்டபடி அந்த மிஷின் திரும்பி வரவில்லை.

இந்நிலையில் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற வெறியுடன் சுற்றி கொண்டிருக்கும் விஷ்ணு, அவருடைய நண்பரும் ஜோதிடருமான கருணாகரன், விஞ்ஞானி பார்த்தசாரதி ஆகியோர்களிடம் இந்த டைம் மிஷின் கிடைக்கின்றது. இந்த டைம் மிஷினை விஞ்ஞானி பார்த்தசாரதி விஷ்ணு, கருணாகரன் இருவரையும் ஏமாற்றிவிட்டு அபகரிக்க நினைக்கும்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு கரண்ட் ஷாக் ஏற்பட்டு கோமாவுக்கு சென்றுவிடுகிறார்.

அதன்பின்னர் அந்த டைம் மிஷினை கைப்பற்றிய விஷ்ணு, கருணாகரன் இருவரும் செய்யும் சேட்டைகள்தான் முதல்பாதி. பின்னர் அந்த டைம் மிஷினில் கடந்த காலத்திற்கு சென்று எதிர்பாராத விதமாக ஒரு சிறிய மாற்றத்தை கருணாகரன் செய்துவிடுகிறார். அதனால் செத்துபோன ஒரு ரவுடி உயிருடன் வந்து விஷ்ணுவின் காதலியின் குடும்பத்திற்கு தொல்லை தருவதோடு காதலியையும் கொன்று விடுகிறார். நிலைமை விபரீதமாகி வரும் நிலையில் விஞ்ஞானி பார்த்தசாரதி வில்லனால் கொலை செய்யப்படுகிறார். டைமிங் மிஷினும் ரிப்பேர் ஆகிவிடுகிறது. இந்த இக்கட்டான நிலையில் இருந்து விஷ்ணுவும் கருணாகரனும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

சொந்த தொழில் தொடங்க விதவிதமான ஐடியாக்களுடன் ஒவ்வொரு வங்கியாக சென்று லோன் கேட்கும் விஷ்ணு, அந்த நிலையிலும் பணக்கார மியா ஜார்ஜை காதலிக்கின்றார். மியா ஜார்ஜின் தந்தை அவமானப்படுத்தியதால் மீண்டும் வேலைக்கு செல்ல முடிவெடுக்கும்போதுதான் டைம் மிஷின் கிடைக்கின்றது. அதன்பின்னர் விஷ்ணுவின் நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கின்றது. டைம் மிஷினை வைத்து முதல்பாதியில் கருணாகரனுடன் இணைந்து அவர் லூட்டிகள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கின்றது.

நாயகி மியா ஜார்ஜுக்கு அதிகம் வேலையில்லை என்றாலும் நடித்தவரை ஓகே. இன்னும் சில காட்சிகள் இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தால் தமிழ் சினிமாக்கு இன்னொரு அழகான நடிக்க தெரிந்த நாயகி கிடைத்திருபபர்.

படத்தின் ஒட்டுமொத்த கலகலப்புக்கு காரணம் கருணாகரன் தான். முதல் பாதியில் டைம் மிஷினை வைத்து ஜோசியம் சொல்வதும், இரண்டாவது பாதியில் படபடப்பான நேரங்களிலும் காமெடி செய்வதிலும் கலக்குகின்றார்.

வில்லனாக வரும் ரவிசங்கர், நாயகியின் தந்தையாகவும், தொழிலதிபராகவும் வரும் ஜெயப்பிரகாஷ், 2065ஆம் ஆண்டு விஞ்ஞானியாக வரும் கார்த்திக், அனைவருமே தங்கள் கேரக்டர்களை புரிந்து நடித்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இரண்டு பாடல்கள் கேட்கும்படியாக இருக்கின்றது. வசந்தின் ஒளிப்பதிவும், லியோபால்ஜானின் எடிட்டிங்கும் படத்திற்கு ப்ளஸ்கள்.

கதையில் பல இடங்களில் குழப்பமும், சந்தேகங்களும் வருகின்றன. செத்து போனவர்கள் எல்லாம் திரும்பி வருவதும், வில்லனை வில்லனே சுட்டு கொல்வதும் என ஆங்காங்கே பல சந்தேகங்கள் வருகின்றன. இருப்பினும் படம் எந்த இடத்திலும் போரடிக்கவில்லை என்பதே இயக்குனர் ரவிகுமாரின் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதையை ரொம்ப ஆழமாக யோசிக்காமல் ஒரு பொழுதுபோக்கு படமாக கண்டிப்பாக பார்க்கலாம். ஜீவாவை அடுத்து விஷ்ணுவுக்கு இது அடுத்த வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை.

இன்று நேற்று நாளை, என்றும் ரசிக்கலாம்
Leave a Reply