ராஞ்சி : இந்தியா , ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4வது ஒருநாள் போட்டி, ராஞ்சியில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 7 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2,1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதால், இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புனேயில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 72 ரன் வித்தியாசத்தில் வென்று 1,0 என முன்னிலை பெற, ஜெய்ப்பூரில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பதிலடி கொடுத்தது.

இரு அணிகளும் 1,1 என சமநிலை வகிக்க, மொகாலியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் கேப்டன் டோனியின் சாதனை சதம் (139*) ஆஸி. அணிக்கு கடினமான இலக்கை நிர்ணயிக்க உதவியது. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில், இஷாந்த் வீசிய 48வது ஓவரில் ஜேம்ஸ் பாக்னர் அதிரடியாக 30 ரன் விளாசி இந்திய அணியிடம் இருந்து வெற்றியை தட்டிப் பறித்தார்.

பார்மில் இல்லாத இஷாந்த்தின் பந்துவீச்சு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், கேப்டன் டோனி அவருக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நடப்பு தொடரில் எஞ்சியுள்ள 4 போட்டிகளுக்கும் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. உலக சாம்பியன், நம்பர் 1 அணி என்ற அந்தஸ்துடன் விளையாடி வரும் இந்திய அணி 1,2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளதால், டோனி , கோ கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

ராஞ்சியில் இன்று நடக்கும் 4வது ஒருநாள் போட்டியில் ஆஸி. அணி வென்றால் 3,1 என முன்னிலை பெறுவதுடன் தொடரைக் கைப்பற்றவும் சாதகமான நிலை ஏற்பட்டுவிடும். அடுத்து நடக்கும் 3 போட்டியில் ஒரு வெற்றி பெற்றால் கூட கோப்பை ஆஸி. அணியின் வசமாவதுடன், 6,1 என அபாரமாக வென்றால் இந்திய அணியின் நம்பர் 1 அந்தஸ்தும் பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இந்திய அணி வெற்றிக்காக கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கலாம். வலுவான பேட்டிங் வரிசை மட்டுமே வெற்றியை உறுதி செய்ய முடியாது என்பதை இந்திய வீரர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே உற்சாகமாகத் துள்ளிக் குதிக்கும் கங்காருக்களை அடக்க முடியும். இதுவரை நடந்துள்ள 3 போட்டியிலுமே பந்துவீச்சு அவ்வளவாக எடுபடாததால், பெஞ்ச்சை தேய்த்துக் கொண்டிருக்கும் அமித் மிஷ்ரா, முகமது ஷமிக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்.

பெய்லி தலைமையிலான ஆஸி. அணி எத்தகைய சவாலுக்கும் தயாராகக் களமிறங்குவதால், ராஞ்சியில் இன்று வாணவேடிக்கை உறுதி. இந்தியா: டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார், வினய் குமார், அமித் மிஷ்ரா, ஜெய்தேவ் உனத்காட், முகமது ஷமி.

ஆஸ்திரேலியா: ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), நாதன் கோல்ட்டர் நைல், சேவியர் தோஹர்டி, ஜேம்ஸ் பாக்னர், கல்லம் பெர்குசன், ஆரோன் பிஞ்ச், பிராட் ஹாடின், மோய்சஸ் ஹென்ரிக்ஸ், பிலிப் ஹியூஸ், மிட்செல் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், கிளின்ட் மெக்கே, ஆடம் வோஜஸ், ஷேன் வாட்சன்.

Leave a Reply