மொகாலி : இந்தியா , ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி மொகாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள ஆஸி. அணி ஒரு டி20 மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ராஜ்கோட்டில் நடந்த டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்ற நிலையில், புனே மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 72 ரன் வித்தியாசத்தில் வென்று 1,0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

அடுத்து, ஜெய்ப்பூரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பதிலடி கொடுத்தது. தவான், ரோகித், கோஹ்லியின் அதிரடி ஆட்டம் கடினமான இலக்கை வெகு சுலபமாக எட்ட உதவியது. அந்த போட்டி இந்திய பேட்டிங் வரிசையின் அசுர பலத்தை வெளிச்சமிட்டாலும், பந்துவீச்சு நாளுக்கு நாள் மிகவும் பலவீனமாகி வருகிறது.

நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவுடன் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டத்திலுமே (டி20, 2 ஒருநாள் போட்டி) இந்திய பவுலர்கள் கடையேழு வள்ளல்களாக மாறி ரன்னை வாரி வழங்கியுள்ளனர். ஏதோ பேட்டிங் கை கொடுத்ததால் ஜெய்ப்பூரில் தலை தப்பியது. இதே போல எல்லா போட்டியிலும் பேட்ஸ்மேன்களே வெற்றிக்காக உழைக்க வேண்டியிருந்தால் தொடரைக் கைப்பற்றுவது கேள்விக்குறியாகி விடும்.

கேப்டன் டோனி கொஞ்சமும் தயங்காமல் புதிய பந்துவீச்சு வியூகத்தை வகுத்தால் மட்டுமே ஆஸி. ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியும். உனத்காட், முகமது ஷமி, அமித் மிஷ்ரா வாய்ப்பு கொடுப்பது காலத்தின் கட்டாயம் என்பதை அவர் உணர வேண்டும். பேட்டிங் பற்றி கவலைப்பட எதுவும் இல்லை என்பதால், பந்துவீச்சை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தினாலே வெற்றி எளிதில் வசமாகி விடும்.

இல்லை என்றால் பிஞ்ச், பெய்லி, வாட்சன், பிரேஸ்வெல் ஆகியோரிடம் சிக்கி சின்னாபின்னமாவதைத் தவிர்க்க முடியாது. அதே சமயம் ஆஸி. பந்துவீச்சும் ஆட்டம் கண்டுள்ளது. 360 ரன் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தும், கோஹ்லியின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் வெற்றியை தாரை வார்த்தது வருத்தமாக உள்ளது என்று ஆஸி. கேப்டன் பெய்லி அங்கலாய்க்கிறார். 2,0 என முன்னிலை பெற அருமையான வாய்ய்பு இருந்தும், அதை வீணடித்துவிட்ட ஆஸி. வீரர்கள் மொகாலியில் அதற்கு பிராயச்சித்தம் தேட முனைவார்கள்.

சமபலம் வாய்ந்த இரு அணிகளும் முன்னிலை பெற வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டம் கடைசி வரை விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியா: டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார், வினய் குமார், அமித் மிஷ்ரா, ஜெய்தேவ் உனத்காட், முகமது ஷமி.

ஆஸ்திரேலியா: ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), நாதன் கோல்ட்டர் நைல், சேவியர் தோஹர்டி, ஜேம்ஸ் பாக்னர், கல்லம் பெர்குசன், ஆரோன் பிஞ்ச், பிராட் ஹாடின், மோய்சஸ் ஹென்ரிக்ஸ், பிலிப் ஹியூஸ், மிட்செல் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், கிளின்ட் மெக்கே, ஆடம் வோஜஸ், ஷேன் வாட்சன்.

Leave a Reply