தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரை சந்திக்கிறது. ஜோகன்னஸ்பர்க்கில் முதல் டெஸ்ட் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய், தவான் களமிறங்கினர். ஒருநாள் போட்டியை போலவே டெஸ்டிலும் தென் ஆப்ரிக்காவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். ஆரம்பத்தில் 2 பவுண்டரி அடித்த தவான் 13 ரன்னிலேயே ஸ்டெய்ன் வேகத்தில் வெளியேறினார்.

முரளி விஜய் 6 ரன்னில் மோர்கல் பந்தில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு புஜாரா, கோஹ்லி ஜோடி சேர்ந்தனர். விக்கெட்டை இழக்கக் கூடாது என்ற நோக்கத்திலேயே புஜாரா விளையாடினார். ஒருமுனையில் இவர் நிலைத்து நிற்க, கோஹ்லி ரன்களை சேர்த்தார். இந்த ஜோடி 89 ரன் சேர்த்த நிலையில், புஜாரா ரன் அவுட் ஆனார். 98 பந்துகளை சந்தித்த இவர் 25 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த ரோகித் சர்மா, 14 ரன்னில் வெளியேறினார்.

இப்படி ஒருமுனையில் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னிலேயே வெளியேறிய போதிலும், கோஹ்லி மட்டும் பொறுப்புடன் ஆடி சதம் அடித்தார். 140 பந்தில் 16 பவுண்டரிகளுடன் இவர் டெஸ்ட் அரங்கில் தனது 4வது சதத்தை பூர்த்தி செய்தார். ரகானே இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இந்நிலையில், கோஹ்லி 119 ரன் எடுத்திருந்த நிலையில் காலிஸ் வேகத்தில் ஆட்டமிழந்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்களுடன் இருந்தது. ரகானே 43 ரன்களுடனும், கேப்டன் தோனி 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்க தரப்பில் ஸ்டெய்ன், பிலன்தர், மோர்கல், காலிஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றியிருந்தனர்.

Leave a Reply