shadow

மும்பை-அகமதாபாத்துக்கு 3 மணி நேரம் மட்டுமே விரைவில் வருகிறது இந்தியாவின் முதல் புல்லட் ரயில்
bullet train
மும்பை – அகமதாபாத் நகரங்களுக்கிடையே புல்லட் ரயில் பாதை அமைக்க கடந்த சில மாதங்களாக ஜப்பான் நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது இந்த திட்டத்திற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சின்சோ அபே அணுஆயுத விவகாரங்கள், ராணுவ உறவுகள் உள்பட பல்வேறு விஷயங்க்ள் குறித்து இந்திய பிரதமருடன் ஆலோசனை செய்யவுள்ளார்.

முதற்கட்டமாக மும்பையில் இருந்து அகமதாபாத் வரை புல்லட் ரயில் பாதை அமைப்பது குறித்து ஒப்பந்தம் இன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் சுமார் 98 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் அமையவுள்ளதாகவும் இந்த புல்லட் ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்தால், இந்த நகரங்களுக்கிடையே உள்ள 505 கிலோ மீட்டர் தொலைவை 3 மணி நேரத்தில் கடந்து விடலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது ‘ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபேவை போல இந்தியாவின் பொருளாதாரத் திட்டங்களை புரிந்து கொண்ட நண்பர் கிடையாது. இந்த திட்டத்திற்காக ஜப்பான் 12 பில்லியன் டாலர் அளவிற்கு வட்டியில்லாத கடன் அளித்துள்ளது. இது மிகப் பெரிய உதவியாக இருந்துள்ளது. புல்லட் ரயில் திட்டம் இந்திய ரயில்வேயில்  மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்று” என்று கூறினார்.

ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே கூறுகையில், “இந்தியா பொருளாதாரரீதியாக வலுப் பெறுவது  ஜப்பானுக்கு நல்லது. ஜப்பான் பொருளாதார ரீதியாக பலம் பெறுவது இந்தியாவுக்கு நல்லது. ஜப்பானில்  இயங்கி வரும் ஷிங்கான்ஷென் ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் புல்லட் ரயில் பாதை போன்றே இந்தியாவில் அமைக்கப்படும். அதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் உள்ளிட்ட அனைத்தும் இந்தியாவுக்கு வழங்கப்படும்” என்றார்.

ஷிங்கான்ஷென் பாதை என்பது, டோக்கியோ நகரம்  முதல் ஒசாகா நகரம் வரை உள்ள புல்லட் ரயில் பாதை ஆகும். இந்த பாதையில் மணிக்கு 285 கி.மீ வேகத்தில் புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

English Summary: Japan and India sign bullet train, nuclear deals

Leave a Reply