shadow

‘கல்வி வள்ளல்’ வீட்டில் சிக்கிய ரூ.52 கோடி கருப்புப்பணம்

black moneyமருத்துவக்கல்லூரியில் சேர்ப்பதற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் வேந்தர் மூவீஸ் மதன் நிலைமை என்னவென்றே இன்னும் தெரியாத நிலையில் தற்போது இன்னுமொரு ‘கல்வி வள்ளல்’ வீட்டில் இருந்து ரூ.52 கோடி கணக்கில் வராத கருப்புப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்தான் ஸ்ரீபாலாஜி கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் கீழ் தமிழகம், புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளின் தலைவர் ராஜகோபால்

ஒரு மருத்துவ சீட்டுக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.80 லட்சம்வரை வசூல் செய்வதாகப் பெற்றோர்கள் தரப்பில் புகார்கள் பறந்த காரணத்தால் உடனடியாக அந்த கல்லூரியை கண்காணிக்கும்படி இந்திய மருத்துவ கவுன்சில்.உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24-ம் தேதி ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுகட்டாக பணம் சிக்கியது. ரூ.20 கோடி வரை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ரூ.52 கோடி வரை சிக்கியதால் அதிகாரிகளே ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

கல்லூரிகளின் தலைவர் ராஜகோபாலின் செயலர்களான சூர்யநாராயணன் மற்றும் ஆஷா, ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரியின் பி.ஆர்.ஓ ஜெரால்டு ஆகியோர் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ராஜகோபால், அவரது மகன் உட்பட உதவியாளர்கள் அனைவரையும் தனது விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து விட்டது வருமானவரித் துறை. ஆனால் பி.ஆர்.ஓ ஜெரால்டு தலைமறைவாகிவிட்டார். அவர் சிக்கினால் இன்னும் பல உண்மைகள் தெரியவரும் என்று கூறப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் வருமானவரித் துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி அவருக்கு நோட்டீஸ் சென்றிருக்கிறது.

புதுச்சேரியில் மட்டும் ராஜகோபாலுக்கு 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருப்பதாகவும், அதில் ஒவ்வொரு வருடமும் 717 மருத்துவ இடங்கள் நிரப்பப்படுவதாகவும் அதில் ஒரு சீட்டுக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடிவரை கறுப்புப் பணம் நன்கொடையாகப் பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல மருத்துவ மேற்படிப்புக்கு இருக்கும் 217 இடங்களுக்கும் ரூ.1 கோடி முதல் ரூ.1.75 கோடிவரை ‘நன்கொடை’யாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply