தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் இயல்பான அளவுக்கு பெய்யும் என்று வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. ஆனால் இதுவரை பருவமழை பலத்த மழையாக பெய்யவில்லை. மாறாக கடந்த சில நாட்களாக குளிர்ந்த காற்று வீசுகிறது. இரவில் குளிர் அடிக்கிறது. இந்த நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மண்டல ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன்:
“தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. அது மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. அது சென்னையில் இருந்து 650 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அது மேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் வடமேற்கு நோக்கி நகரும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற பெரும்பாலும் வாய்ப்பில்லை. எனவே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும்போதே நாளை 15 ஆம் தேதி இரவு அல்லது 16 ஆம் தேதி காலை சென்னைக்கும், நாகப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும்.

15 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் வடக்கு கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த அல்லது மிக பலத்த மழை பெய்யும். அதாவது 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 ஆம் தேதி முதல் தரைக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகம் முதல் 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும்.

இப்போதே கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. அலையின் உயரம் வழக்கத்தை விட உயரமாக வருகிறது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு சென்றவர்களும் கரைக்கு திரும்பிவருவது நல்லது.

இன்று தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகத்தின் பெரும்பாலான கடற்கரை பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 1 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் கூண்டும், நாகப்பட்டினம் துறைமுகத்தில் 5 ஆம் எண் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, எண்ணூர், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, பாம்பன் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களில் 1 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a Reply