பீகார் மாநில மதுவிலக்கில் திடீர் தடுமாற்றம். கள் விற்க அனுமதி

பீகார் மாநில மதுவிலக்கில் திடீர் தடுமாற்றம். கள் விற்க அனுமதி

toddyபீகார் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பூரண மதுவிலக்கு இருந்து வருகிறது. இதனால் குடிப்பழக்கத்தை விட முடியாதவர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்றும், நேபாள பார்டரிலும் மது அருந்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தாலும் கள் விற்க தடையில்லை என்று முதல்வர் நிதீஷ்குமார் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அழுத்தம் காரணமாகவே கள்ளுக்கடைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிகார் மாநிலத்தில் தற்போது மூன்று கட்சிக் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இதில், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு 80 எம்எல்ஏ.க்களும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 71 எம்எல்ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 27 எம்எல்ஏ.க்களும் உள்ளனர். இந்நிலையில் மதுவிலக்கால் அரசுக்கு கிடைத்த வருமானம் பெருமளவு குறைந்தது குறித்த ஆலோசனை கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கள் கடைகள் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சட்டத்திருத்தம் மதுவிலக்கு மற்றும் கலால் மசோதா 2016-ல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கள் இறக்கும் சமுதாயத்தவர்கள் தங்களின் வருமானத்துக்கு வேறு வழியைக் கண்டறியும்வரை கள்ளுக்கு தடை விதிக்கப்படமாட்டாது. நீரா (பதனீர்) தொழிலை மேம்படுத்துவதில் அரசு ஈடுபட்டுள்ளது. எனவே, கள் இறக்குபவர்களுக்கு மாற்றுத் தொழில் கிடைக்கும். அதுவரை கள்ளுக்கு தடை இல்லை” எனத் தெரிவித்தார்.

மாநில கலால் துறை அமைச்சர் அப்துல் ஜலில் மஸ்தான், கள்ளுக்கும் தடை விதிக்கப்படும் என கடந்த வெள்ளிக்கிழமை உறுதியாக தெரிவித்திருந்தார். தற்போது அந்நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொண்டுள்ளார். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து நகரப்பகுதியாக இருப்பின் 100 மீட்டர் தொலைவுக்கு அப்பாலும், கிராமப்பகுதிகளில் 50 மீட்டர் தொலைவுக்கு அப்பாலும் கள் விற்க அனுமதிக்கப்படுகிறது.

ஆட்சியை தக்க வைப்பதற்காக மதுவிலக்கு கொள்கையை நிதிஷ்குமார் தளர்த்தி கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.