shadow

பி.எஸ்.என்.எல் முறைகேடு வழக்கு. நேரில் ஆஜரான மாறன் சகோதரர்கள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாறன் சகோதரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதனையடுத்து மாறன் சகோதரர்களான கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பணியாற்றிய தயாநிதிமாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளையும், 19 செல்போன் இணைப்புகளையும் முறைகேடாக பயன்படுத்தியதாக அவர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தயாநிதி மாறன் மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் மீது சிபிஐ கடந்த ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. மேலும் நேரில் ஆஜராகி பதிலளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகிய இருவரும் இன்று சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இவர்களுடன் தயாநிதிமாறனின் செயலாளர் கவுதமன், சன்டிவி ஊழியர்கள் கண்ணன், ரவி, பிஎஸ்என்எல் அதிகாரிகள் பிரம்மநாதன், வேலுச்சாமி ஆகியோரும் ஆஜராகினர். இந்த வழக்கு இன்று விசாரணை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீதிபதி இந்த வழக்கை வரும் மே 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply